ஏப்ரல் 15
“கைம்பெண்களை ’கங்கா பாகீரதி’ என்று அழைப்பது தொடர்பான திட்டம் பரிசீலனையில் மட்டுமே இருக்கிறது. இத்திட்டம் முறைப்படி தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும் முன்பு எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதை உறுதியாகக் கூறுகிறேன்” – அமைச்சர்
மகாராஷ்டிராவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருப்பவர் மங்கள் பிரபாத் லோதா. பிரபல பில்டரான லோதா, கைம்பெண்களை ’கங்கா பாகீரதி’ என்று அழைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், `உடல் ஊனமுற்றவர்களை இப்போது மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறோம். அவ்வாறு அழைக்க ஆரம்பித்ததில் இருந்து அவர்களுக்கு சமுதாயத்தில் மதிப்பு உயர்ந்திருக்கிறது.
அதோடு மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கத் தொடங்கியதில் இருந்து சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகள் மீதான பார்வையும் மாறியிருக்கிறது. அதே போன்று கைம்பெண்களை ’கங்கா பாகீரதி’ என்று அழைப்பது குறித்து விவாதிக்க விரிவான திட்டத்தை தயாரிக்க வேண்டும்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் லோதாவின் கருத்துக்கு பெரிய அளவில் எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. ’கங்கா பாகீரதி’ என்பது அனைத்து மதத்தை சேர்ந்த கைம்பெண்களுக்குமான பொது வார்த்தையாக இருக்காது என்று பலரும் விமர்சிக்கின்றனர்.
இதையடுத்து லோதா, இது தொடர்பாக புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’கைம்பெண்களை ’கங்கா பாகீரதி’ என்று அழைப்பது தொடர்பான திட்டம் பரிசீலனையில் மட்டுமே இருக்கிறது. இது தொடர்பான எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாது. இத்திட்டம் முறைப்படி தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும் முன்பு எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதை உறுதியாகக் கூறுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் லோதாவின் இந்தத் திட்டம் குறித்து சுப்ரியா சுலே எம்.பி.கூறுகையில், `அமைச்சரின் அறிவிப்பு மிகவும் வேதனையளிக்கிறது. உடனே இத்திட்டம் ரத்து செய்யப்படவேண்டும். ஜிஜாபாய், சாவித்ரிபாய் புலே போன்ற பெண் தலைவர்கள் சமுதாயத்திற்கு மிகப்பெரிய அளவில் பங்காற்றி இருக்கின்றனர்.
எனவே இது போன்ற முடிவுகள் எடுக்கப்படும் போது தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள், கைம்பெண்களுக்காகப் பாடுபடும் அமைப்புகளிடம் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அதுல் லோண்டே அளித்த பேட்டியில், ’பா.ஜ.க. மனுதர்ம சிந்தனையுடன் பெண்களை இழிவுபடுத்த முயற்சிக்கிறது. மகாராஷ்டிரா வளர்ச்சியில், லோதா ஒரு களங்கம். பெண்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். மகாராஷ்டிராவில் சமூக சீர்திருத்தத்தை ஏற்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கைமெப்ண்களுக்கு எதிரான சடங்குகளுக்கு கூட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். மகாராஷ்டிராவில் சில இடங்களில் கைம்பெண்கள் ’கங்கா பாகீரதி’ என்று அழைக்கப்படுகின்றனர்.