கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு..! சசிகலா உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி திட்டம்..!!

ஏப்ரல்.28

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா உள்ளிட்ட சிலரிடம் மே முதல் வாரத்தில் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவுசெய்துள்ளனர்.

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாவலராக இருந்த உதவி ஆணையர் கனகராஜ் உள்ளிட்ட பலரிடம் அண்மையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர். மேலும் கொலை நடந்த கொடநாடு பங்களா, கனகராஜ் உயிரிழந்த இடம், சயான் குடும்பத்தினர் உயிரிழந்த இடம் மற்றும் விபத்து ஏற்படுத்திய வாகனங்கள் குறித்தும் சிபிசிஐடி போலீசார் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில், இதன் அடுத்தகட்டமாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி வி.கே சசிகலா, முன்னாள் MLA ஆறுகுட்டி ஆகியோரிடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் கனகராஜ் உயிரிழந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி எடப்பாடி பகுதியைச் சேர்ந்த ஜோதிடரை தனது மனைவியுடன் சென்று சந்தித்து இருப்பதும், அப்போது ஜாதகத்தில் கண்டம் இருப்பதாக ஜோதிடர் சொல்லியிருப்பதும் சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கனகராஜ் சந்தித்த ஜோதிடரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர சிபிசிஐடி போலீசார் முடிவெடுத்துள்ளனர். மே முதல் வாரத்தில் இவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட இருப்பதாக சிபிசிஐடி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரிப்பதால் மீண்டும் சூடுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *