June 04, 2023
கோரமண்டல் ரயில் விபத்து : உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
கோரமண்டல் ரயில் விபத்து நடைபெற்று இதுவரை 301பேர் உயிரிழந்துள்ள நிலையில் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களை இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் நேற்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த கோர விபத்தில் 301பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 900பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் விஷால் திவாரி என்பவர் கோரமண்டல் ரயில் விபத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனுவில் விபத்திற்கான காரணம் தொடர்பாக உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும், விசாரணை அறிக்கையை 2மாதத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
வரும் காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் தடுக்கவும், ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தானியங்கி நவீன சிக்னல் கருவிகளை நிறுவ மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கவும் உரிய பரிந்துரைகளை வகுத்து அரசுக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்டவை அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன.