தமிழ்நாட்டில் தனியார் பேருந்தின் முதல் ஓட்டுநர் கோவை சர்மிளாவுக்கு உலக நாயகன் கமல்ஹாசன் கார் ஒன்றை பரிசாக வழங்கி தன் பெருந்தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தனியார் பேருந்து ஓட்டுநராக 24 வயது சர்மிளா சில மாதங்கள் முன்பு பணியாற்ற தொடங்கியது முதலே அவருக்கு பாரட்டுகள் குவிந்து வந்தன. வலை தளங்களில் அவரை முன் மாதிரி பெண் என்று அனைவரும் புகழந்துப் பேசினார்கள்.
சர்மிளாவை பாராட்டு வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர் இயக்கிய பேருந்தில் கடந்த வாரம் பயணம் செய்து அவருக்கு கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக அளித்தார். அப்போது அந்த பேருந்தில் ஓட்டுநராக இருந்த அன்னதாய் என்ற பெண் நடத்துநர் கனிமொழியை டிக்கெட்டு எடுக்குமாறு கூறியதே சர்ச்சைக்கு காரணமாகும். திமுக எம்.பி.யும் உடனே டிக்கெட் வாங்கிவிட்டர்.
இது பற்றி சர்மிளா தமது பேருந்தின் உரிமையாளர் துரைக்கண்ணுவிடம் புகார் தெரிவித்த போது சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் சர்மிளா அந்த வேலையை விட்டு எறிந்துவிட்டார். இந்த செய்தி பரவிய உடனேயே கனிமொழி தொலைபேசியில் சர்மிளாவை தொடர்பு கொண்டு வேறு வேலைக்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் துணிச்சலாக இருக்கும் படியும் கேட்டுக்கொண்டார்.
இந்த சூழலில் உலக நாயகன் கமல்ஹாசன் தமது கமல் பண்பாட்டு மையம் என்ற அமைப்பு சார்பில் கார் ஒன்றை பரிசாக வழங்கி சர்மிளாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.
கமல்ஹாசன் அறிக்கை
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி, முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தவர் ஷர்மிளா.
பேருந்து ஓட்டுநராக வரவேண்டுமெனும் தன்னுடைய கனவிற்காக உழைத்து, சவாலான பணியை திறம்படச் செய்து வந்தார். அதற்காகப் பல்வேறு தரப்பின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார்.
தன் வயதையொத்த பெண்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஷர்மிளா குறித்த சமீபத்தைய விவாதம் என் கவனத்திற்கு வந்தது. மிகுந்த வேதனை அடைந்தேன்.
ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல. பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவரென்பதே என் நம்பிக்கை.
கமல் பண்பாட்டு மையம் தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை ஷர்மிளாவிற்கு வழங்குகிறது. வாடகைக் கார் ஓட்டும் தொழில்முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடரவிருக்கிறார்.
ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தளைகளை உடைத்து தரணி ஆளவருகையில், ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
மகள் ஷர்மிளாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
உங்கள் நான், கமல்ஹாசன்.
இனி உழைப்பின் அருமை உணராதவர்களிடம் சர்மிளா பேருந்து ஓட்டுநராக வேலை செய்து அவமானப்பட வேண்டி இருக்காது. கமலஹாசன் கொடுத்த காரை வாடகைக்கு ஓட்டி சுயமாக சம்பாதிக்கலாம்.
000