மே.12
கோவையில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரின் உடல் உறுப்புகளை 7 பேருக்கு பயன்படும் வகையில், அவரது பெற்றோர் தானமாக வழங்கினர்.
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணையைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது25). இவர் கோவையில் தங்கி பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 29ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அவினாசி சாலை, தொட்டிபாளையம் பிரிவு அருகே அவருக்கு விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த சீனிவாசனுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், கடந்த 9ஆம் தேதி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையறிந்த சீனிவாசனின் பெற்றோர் இளமுருகன், கனகவல்லி ஆகியோர் மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்தனர். இதனைத் தொடர்ந்து மூளைச்சாவு அடைந்த சீனிவாசனின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இருதயம், நுரையீரல், தோல் மற்றும் எலும்பு ஆகியவை தானமாக பெறப்பட்டன.
அதில் கல்லீரல், ஒரு சிறுநீரகம், இதயம், ஒரு சிறுநீரகம், தோல் மற்றும் எலும்பு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், நுரையீரல் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதன் முன்னுரிமை அடிப்படையில் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டது. இளைஞர் சீனிவாசனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதின் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.