சட்டப் பேரவை நிகழ்ச்சிகள் அவசர நிலை காலத்தை நினைவூட்டுவதாக ஆளுநர் ரவி புகார்.

ஜனவரி -06.

தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தணிக்கை செய்ய்பட்டிருப்பது அவசர காலத்தை நினைவூட்டுவதாக ஆளுநர் மாளிகை குற்றஞ்சாட்டி உள்ளது.

ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் சட்டப்பேரவையில் தமது உரையை படிக்க வேண்டிய ஆளுநர் அதனை படிக்காமல் சில நிமிடங்களில் வெளியேறியதும் ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் சட்டப் பேரவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய பிறகு தேசீய கீதம் பாடவி்ல்லை என்பதால் ஆளுநர் வெளியேறியதாக கூறப்பட்டு இருந்தது.

இதற்கு பதிலளித்து அவை முன்னவரான துரைமுருகன் சட்டப் பேரவையில் அறிக்கை ஒன்றை வாசித்தார்.

அதில் ” தேசிய கீதம் தொடர்பாக ஆளுநர் கடந்த ஆண்டில் சட்டப்பேரவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதற்கு பேரவைத் தலைவர் பதிலளித்தார். இந்த அவையில் பின்பற்றப்படும் மரபின் அடிப்படையில் ஆளுநர் உரையின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் உரையின் நிறைவில் தேசிய கீதமும் பாடப்படுவதை அதில் சுட்டிக்காட்டினார். ஆனால், மீண்டும் இதனை ஒரு பிரச்னையாக ஆளுநர் குறிப்பிட்டு, உரையை படிக்காமல் சென்றது அவரது உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்த கேள்வியை எழுப்புகிறது. இந்த நாட்டின் மீதும் தேசிய கீதத்தின் மீதும் பெரும் மதிப்பை தமிழ்நாட்டு மக்களும் இந்தப் பேரவையும் கொண்டிருக்கிறார்கள். தேசிய ஒருமைப்பாட்டிலும் நாட்டுப் பற்றிலும் என்றும் மாறாத நன்மதிப்பைக் கொண்டது இந்த அரசு” என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பிறகு சட்டப்பேரவையில் விதி எண் 17- ஐத் தளர்த்தி தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் “ஆளுநர் உரையில் அச்சிடப்பட்ட பகுதிகள் மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெற வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.

இதனைத் தொடர்ந்தது சட்டப் பேரவைக்கு வெளியே ஆளுநர் ரவியை விமர்சனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

“தனது அரசியல் சட்டக் கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?” என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா.

தமிழ்நாட்டு மக்களையும், அரசையும், சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

“கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது!

அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு. அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர் ரவி”
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தமது அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

முதலமைச்சர் அறிக்கை வெளியான சில மணி நேரம் கழித்து கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

இன்று தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது. மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் பேரவையின் உண்மையான நடவடிக்கைகள், அதில் உள்ள அவர்களின் பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றை அறிவதில் இருந்து விலக்கப்பட்டனர். அதற்கு பதிலாக மாநில அரசின் வெட்டப்பட்ட காட்சிகள் மட்டுமே வழங்கப்பட்டன.

தேசிய கீதம் தொடர்பான அடிப்படைக் கடமையைப் புறக்கணித்ததன் மூலம் அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டது மட்டுமன்றி, அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்யப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமையும் வெட்கக்கேடான முறையில் நசுக்கப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக சட்டப் பேரவைக்கு வெளியே பேட்டி அளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை உரை நிகழ்த்த விடாமல் தடுத்தது திமுக அரசுதான் என்று குற்றஞ்சாட்டினார்.

காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை உட்பட திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் ஆளுநரின் செயலைக் கண்டித்து உள்ளார்கள்.
*

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *