ஏப்ரல் 18 -சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் சுயநலவாதிகளின் தூண்டுதலின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டு, போக்குவரத்தை முடக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம் என்று மீனவர்களை அறிவுறுத்தி உள்ளது.
சென்னையில் கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து மீனவர்கள் மீன் கடைகள் அமைத்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு ஒன்றை நடத்தி வருகிறது,
இதனையடுத்த லூப் சாலையின் மேற்கு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அங்குள்ள உணவகங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை சோதிக்குமாறும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பாலாஜி அடங்கிய அமர்வில் செவ்வாயன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மீனவர்கள் வழக்கில் தங்களையும் இணைக்க கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
அதில், லூப் சாலை பொது சாலையல்ல என்றும், மீனவர்கள் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட சாலை என்றும் கூறியிருந்தனர். சாந்தோம் சாலையை விரிவாக்கம் செய்யும் வரை லூப் சாலை தற்காலிகமாக போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் என்று மாநகராட்சி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாகவும் மனுவில் மீனவர்கள் தெரிவித்து இருந்தனர்.
மேலும், லூப் சாலையை விரிவாக்கம் செய்யக் கூடாது; நடைபாதைகள் அமைக்க கூடாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவையும் மீறி, மாநகராட்சி இந்த சாலையை விரிவுபடுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், லூப் சாலையில் இருந்த 75 மீன் கடைகள், 15 குடிசைகள், 21 பெட்டிக்கடைகள் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் அகற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்து இருந்தார்.
மேலும் 20 உணவகங்கள் உரிய உரிமம் இல்லாமல் செயல்பட்டுவந்ததால், அவற்றின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையர் கூறியிருந்தார்.
மீன்கடைகளுக்கு வருவோரின் வாகனங்களை கலங்கரை விளக்கம் மற்றும் பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே உள்ள இடங்களில் மட்டும் நிறுத்தும்படி காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளதாகவும் ககன் தீப் சிங் பேடி குறிப்பிட்டு இருந்தார்.
நீதிமன்றம் அனுமதி அளித்தால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீன் சந்தை கட்டுமான பணிகள் முடியும் வரை சாலையின் மேற்கு பக்கம் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் கடைகளை அமைத்து, சாலையை ஒழுங்குபடுத்த தயாராக இருப்பதாகவும் அறிக்கையில் அவர் சொல்லியிருந்தார்.
இதையடுத்து நீதிபதிகள், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின் கடந்த ஒரு வாரமாக லூப் சாலையில் சில சுயநலவாதிகளின் தூண்டுதலின் பேரில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, போக்குவரத்தை முடக்கியுள்ளதாகவும், இதை சகித்துக் கொள்ள முடியாது என்றும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தும்படி அவர்கள் தரப்பு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டனர்.
பசுமைத் தீர்ப்பாய உத்தரவு, சுற்றுச்சூழல் அனுமதி பற்றி தான் குறிப்பிடுவதாக தெரிவித்த நீதிபதிகள், லூப் சாலை நடைபாதையில் அதிகரித்துள்ள உணவகங்களையும் , நடைபாதையில் உணவு சமைக்கப்படுவதையும் தடுப்பது மாநகராட்சியின் கடமை இல்லையா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, சாலையின் மேற்கு பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்து சாலை வரையுள்ள பகுதியில் மீன் கடைகள் அமைக்க மாநகராட்சி தரப்பில் கோரிய அனுமதி குறித்து மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை புதன் கிழமைக்கு தள்ளிவைத்தனர்.