பெரிய நடிகர்கள் படங்களில், அண்டை மாநில உச்ச நட்சத்திரங்கள் கவுரவ வேடங்களில் நடிப்பது புதிய விஷயமல்ல.
ரஜினியின் மாப்பிள்ளை படத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சிவி, சண்டை காட்சி ஒன்றில் நடித்திருந்தார்.
சரத்குமார் நடித்த நாட்டாமை படம் தெலுங்கில் பெத்தராயுடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.மோகன்பாபு கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் ரஜினிகாந்த், கெஸ்ட் ரோலில் நடித்து கொடுத்தார்.
இந்நிலையில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தில், சிறப்புத்தோற்றத்தில் விஜய் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்க்கு தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை கொடுத்த நம்ம ஊர் டைரக்டர் அட்லி, ஜவான் படத்தை இயக்கியுள்ளார்.
ஷாருக்கானுடன், விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு, பிரியாமணி நடித்துள்ள ‘ஜவான்’ படத்தில் தீபிகா படுகோன், சஞ்சய் தத் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இந்த படத்தை ஷாருக்கான் மனைவி கவுரி கான் தயாரித்துள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்தில் ஷாருக்கானுடன் விஜய் சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் யானிக் பென் , அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்த தகவலை வெளியிட்டார்.
‘ஜவான் படத்தில், ஷாருக்கான், விஜய் இருவரும் அதிரடி சண்டைக் காட்சியில் இணைந்து நடித்துள்ளனர். இந்த சண்டைக்காட்சி நிச்சயம் இருதரப்பு ரசிகர்களுக்கும் மிகப்பெரிய விருந்தாக இருக்கும்’ என்று அவர் தெரிவித்தார்.
இந்த படத்தில் நடிப்பதற்காக விஜய் சம்பளம் வாங்கவில்லை என்பது கூடுதல் தகவல். ஷாருக்கான் மற்றும் இயக்குனர் அட்லியுடனான நட்புக்காகவே அவர் பணம் வாங்காமல் நடித்துள்ளார்.
000