மே.25
சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தமிழகத்தில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபோது, மாநிலத்தின் பொருளாதாரத்தை 2030-31-ம் நிதி ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு மேம்பட செய்வது லட்சம் என தெரிவித்த நிலையில், அதனை சாத்தியமாக்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 9 நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. அதாவது, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை நிறுவனத்திற்கும் இடையே ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, பல்கலைக்கழக ஒத்துழைப்பு, அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, தமிழ்நாட்டில் தொழில்துறைகளின் ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு ஆதரவு போன்றவற்றில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுவனத்திற்கும் இடையே பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சியில் ஒத்துழைப்பை ஏற்படுத்துதல் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 700 பேருக்கு வேலைவாய்ப்பு சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகத்திற்கும், தமிழ்நாட்டின் பேம் டி.என். மற்றும் டான்சிம் நிறுவனங்களுக்கும் இடையே தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப தொடர் கல்விக்கான திறன் மேம்பாடு, ‘ஸ்டார்ட்அப் டி.என்.’ மூலம் ‘ஸ்டார்ட்-அப்’ பொருளாதார செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு கூட்டாண்மைகளை எளிதாக்குதல் போன்றவற்றிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூரை சேர்ந்த ‘ஹய்-பி இன்டர்நேஷனல்’ நிறுவனத்திற்கும் இடையே ரூ.312 கோடி முதலீடு மற்றும் 700 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மின்னணு பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.