ஜனவரி-16.
தமிழ் நாடு ழுமுவதும் ஜல்லிக்கட்டு நடந்தாலும் மதுரை சுற்று வட்டாரங்களில் நடக்கும் போட்டிகள் தான் மிகவும் பிரசித்தமாக விளங்குகின்றன. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளின் தொடக்த்தில் கோவில் காளை அவிழ்த்து விடப்படுகிறது. இதனை யாரும் அடக்க மாட்டார்கள். அது
ஏன் என்பதை விளக்குவதுான் இந்த செய்தித் தொகுப்பு.
வரலாற்று நூல் ஒன்றில் கோவில் காளை வரலாறு விவரமாகவே உள்ளது. அதனை அப்படியே பார்க்கலாம்.
மதுரை மாவழட்டத்தில் எங்கு 4ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் சாமி மாடு என்று முதலாவாக ஒன்றை அவிழ்த்து ஓடவிடுவார்கள். அதை யாரும் பிடிக்கக்கூடாது என்பது ஆண்டாண்டு கால மரபு. விபரம் அறிந்தவர்களுக்குத் தெரியும் அந்த மாடு மாவீரன் அழகாத்தேவன் நினைவாகவே அவிழ்த்துவிடப்படுகிறது என்பது.
யார் இந்த அழகாத்தேவன்?
மதுரை மாவட்டத்தில் சொரிநாயக்கன்பட்டியைச் (இன்றைக்கு அது சொரிக்காம்பட்டி) சேர்ந்தவர் கருத்தமாயன். நிலபுலன்களோடு வாழ்ந்த செல்வந்தர். அவரது கடைக்குட்டி அழகாத்தேவன் புஜபல பராக்கிரமுடைய இளைஞன். ஆனால் பொறுப்பில்லாமல் தனது நண்பன் தோட்டி மாயாண்டியோடு ஊர் சுற்றுகின்ற நாடோடி.
அழகாத்தேவனுக்கு கால்கட்டு (கல்யாணம்) போட்டுவிட்டால் பையன் ஒழுங்காக இருப்பான் என்று பெரியவர்கள் கூறியதைக் கேட்ட கருத்தமாயன் பெண் பார்க்கும் படலத்தைத் தொடங்கினார்.
நாகமலைக்கு அருகேயுள்ள கீழக்குயில்குடியில் வாழ்ந்து வரும் கருத்தமலையின் மகள் ஒய்யம்மாள் குறித்து அறிந்து, தன் செல்வாக்குக்கு சமமாக இல்லையெனினும் கருத்தமாயன், கருத்தமலையின் வீட்டிற்கு பெண் பார்க்கச் செல்கிறார்.
கருத்தமலைக்கோ ஏக மகிழ்ச்சி. தனது மகளைப் பெண் பார்க்க கருத்தமாயன் வருவதையறிந்து ஊருக்குள் தடபுடல் செய்கிறார். வழக்கமான சம்பிரதாயங்கள் முடிந்த பின்னர் கருத்தமாயன், தனது மகன் அழகாத்தேவனுக்கு ஒய்யம்மாளைக் கேட்கிறார். கருத்தமலையோ தனது மகளிடம் ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்று கூறி ஒய்யம்மாளிடம் கேட்கிறார்.
அவளுக்குப் அழகாத்தேவனைப் பிடித்துப்போனாலும், நிபந்தனை ஒன்றை விதிக்கிறாள். தான் வளர்த்து வரும் ஏழு காளைகளை அழகாத்தேவன் அடக்கினால், திருமணத்திற்கு ஒத்துக் கொள்வதாகவும், ஒருவேளை தோற்றால் தனது வீட்டில் பண்ணை அடிமையாக வேலை பார்க்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கிறாள்.
இந்த சவாலை அழகாத்தேவனும் ஏற்றுக் கொள்கிறான். காளையை அடக்குவதற்கு நாள் குறிக்கிறார்கள். தனது நண்பன் தோட்டி மாயாண்டியோடு இணைந்து கடும் பயிற்சி மேற்கொள்கிறான் அழகாத்தேவன். அந்த நாளும் வருகிறது. இரண்டு ஊர்ப் பொது மக்கள் மட்டுமன்றி, பக்கத்து ஊர் ஜனங்களும் கூடி நிற்க அழகாத்தேவன், வாடிவாசல் அருகே ஒய்யம்மாள் வளர்த்த ஏழு காளைகளை ஒவ்வொன்றாக எதிர்கொள்கிறான்.
அனைத்துக் காளைகளையும் மிகத் திறமையாகக் கையாண்டு வீழ்த்திய அழகாத்தேவன், ஏழாவது காளையோடு மல்லுக்கட்டுகிறான். கடுமையான போராட்டத்திற்கிடையே அந்தக் காளை அழகாத்தேவனின் வயிற்றைப் பதம் பார்க்கிறது.
குடல் வெளியே சரிந்த நிலையிலும் போராடி அந்தக் காளையை அடக்கிவிடுகிறான். உயிருக்கு ஆபத்தான நிலையில், அழகாத்தேவனை அழைத்துச் செல்கின்றனர். ஆனாலும் வாக்குக் கொடுத்த காரணத்திற்காக கருத்தமலை பெண் கொடுக்க சம்மதம் தெரிவிக்கிறார்.
சுத்துப்பட்டு கிராம ஜல்லிக்கட்டுகளில் பெயர் பெற்ற தங்களது காளைகளை அடக்கிவிட்டானே என்ற பொறாமையின் காரணமாக ஒய்யம்மாளின் சகோதரர்களுக்கு அழகாத்தேவனைப் பிடிக்கவில்லை. ஆகையால் அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்து, அழகாத்தேவனுக்கு மருத்துவம் பார்த்த பெண்ணை சரிக்கட்டி, அவனது உடம்பில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் ஏற்றிக் கொலை செய்துவிடுகிறார்கள்!!
இந்த செய்தி ஒய்யம்மாளுக்குத் தெரியவரும்போது, தாங்கொணாத துயரத்தில் அழகாத்தேவனோடு உடன்கட்டை ஏறி தனது உயிரை மாய்த்துக்கொள்கிறாள்!!
அழகாத்தேவன் நினைவாக அவனது பரம்பரையில் வந்தோர், மதுரை மாவட்டம் செக்கணூரணிக்கு அருகிலுள்ள சொரிக்காம்பட்டியில் கோயில் கட்டி வணங்கி வருகின்றனர்.
கருவறையில் காளையோடு அழகாத்தேவன் நிற்க… அக்கோயிலுக்கு வெளியே அமைக்கப்பட்ட நினைவு வளைவில் நண்பன் தோட்டி மாயாண்டிக்கும் சிலை எழுப்பியுள்ளனர்.
கீழக்குயில்குடிக்காரர்களிடம் சொரிக்காம்பட்டிக்காரர்கள் எந்தவித மண உறவோ, கொடுக்கல் வாங்கலோ இப்போதும் வைத்துக்கொள்வதில்லை. இந்த மரபு காலங்காலமாகத் தொடர்கிறது.
நானூறு ஆண்டுகால காதல் வரலாற்றை மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்றும் தழும்பாய் சுமந்து கொண்டிருக்கின்றன… சொரிக்காம்பட்டி கிராம எல்லையில்… தோட்டி மாயாண்டி காவல் நிற்க… அழகாத்தேவன் கருவறையில் காளையோடு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறான்… ஒய்யம்மாள் அக்கருவறை காற்றோடு காற்றாய்…
இந்த வரலாற்றை பிரமலைக்கள்ளர் வாழ்வும் வரலாறும் நூலில் தோழர் சுந்தர வந்தியத் தேவன் எழுதி உள்ளார்.
இனி நாம் எப்போதாவது மதுரை செல்லும் போது அருகில் உள்ள சொரிக்காம்பட்டிக்குச் சென்று அந்த ஜல்லிக்கட்டு சிலையை பார்த்து வராலம்.
*