ஆகஸ்டு,1-
மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்கு மடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 கிராம மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் 4000 பைபர் படகுகள், 300 விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
நடுக் கடலில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டு வந்த பைபர் படகையும், அதில் இருந்த மீனவர்கள் மூன்று பேரும் தரங்கம்பாடி கிராமத்து மீனவர்களால் நேற்று சிறைப் பிடிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள சந்திரப்பாடி என்ற ஊரைச் சேர்ந்த மீனவர்கள் ஆவர். இதையடுத்து கடலோர காவல் படை மற்றும் பொறையார் காவல் நிலைய போலீசார் மீனவ பஞ்சாயத்தார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சந்திரபாடி மீனவர்களை அழைத்துச் சென்றனர். அவர்கள் பிடித்து வந்த மீன்கள் தரங்கம்பாடி துறைமுகத்தில் ஏலம் விடப்பட்டது.
சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதை தடை செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோயில், சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, மூவர் கரை, பெருமாள் பேட்டை, புதுப்பேட்டை, தொடுவாய், உள்ளிட்ட 21 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நள்ளிரவு முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் நான்காயிரம் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு உள்ளன.
சுருக்கு மடி வலை என்பது வட்டமாக இருக்கும் . அதன் விளிம்பில் சிறு,சிறு கற்களை கட்டி இருப்பார்கள். வலையைத் தூக்கி வீசினால் முனையில் கற்கள் இருப்பதால் அந்த எடையால் கடலின் அடிப்பகுதி வரை சென்று விடும். பிறகு இழுத்தால் முட்டை, குஞ்சு அனைத்தையும் வாரிக் கொண்டு வந்து விடும். இதனால் மீன் இனமே அழிந்து விடும் என்பதால் சுருக்கு மடி வலையை பயன்படுத்தக் கூடாது என்பதில் பெரும்பாலான மீனவர்கள் உறுதியாக உள்ளனர். இதையும் மீறி பேராசைக் கொண்ட மீனவர்கள் சுருக்கு மடி வலையை பயன்படுத்துவது பிரச்சினை ஆகி விடுகிறது.
000