May 390, 2023
நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ள செங்கோல் பற்றி புனை கதைகள் அதிகமாக வருகிறது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட புதிய நாடளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே, சோழர்களின் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் செங்கோல் நம் அனைவருக்கும் ஊக்கம் அளிக்கும். செங்கோல் தற்போதுதான் சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. நீதி, நல்லாட்சியின் அடையாளம் செங்கோல். சோழர் காலத்தில் நீதி மற்றும் நல்லாட்சியின் அடையாளமாக செங்கோல் விளங்கியது. புனிதமான செங்கோலின் பெருமையை மீட்டெடுக்க முடிந்தது நமது அதிர்ஷ்டம். 900 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஜனநாயக பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் அதிகாரப்பகிர்வுக்கு பயன்படுத்தப்பட்ட செங்கோலுக்கு உரிய மதிப்பு அளித்துள்ளோம். இவ்வாறு கூறினார். இதனிடையே நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ள செங்கோல் பற்றி புனை கதைகள் அதிகமாக வருகிறது. செங்கோல் பற்றி நேற்று கூட ஆளுநர் ஒரு துணைக் கதையை கூறியுள்ளார். நேரு மற்றும் ராஜாஜியின் வரலாற்றை இரு வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். 1947 ஆக.14-ல் மவுண்ட் பேட்டன் பிரபு டெல்லியில் இல்லை, பாகிஸ்தானில் இருந்தார் என்பது வரலாற்று ஆசிரியர்களின் கூற்று. வரலாற்று ஆசிரியர்கள் கூறுவது மட்டுமே உண்மையான வரலாறு, மற்றவை எல்லாம் புனையப்படுவது. துணைக் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். இவ்வாறு கூறினார்.