June 14, 23
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று அமலாக்க துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அத்துடன் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. சுமார் 12 மணி நேரம் சோதனை நடைபெற்ற நிலையில், நள்ளிரவு செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். நெஞ்சுவலி ஏற்படவே அவர் உடனடியாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அறிந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் , கே.என். நேரு , சேகர்பாபு உள்ளிட்டோர் அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து விசாரித்து செல்கின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருந்த முதல்வரின் ஆய்வுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற இருந்த நிலையில் தற்பொழுது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.