பாரதீய ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்ததால் திமுக அமைச்சர்களை குறிவைத்து விசாரணை அமைப்புகளை மத்திய அரசு ஏவி விடுவதாக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளேடான தி இந்துவுக்கு அவர் அளித்து உள்ள பேட்டியில் “ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மத்திய அரசு கடிவாளம் போடாவிட்டால் தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்” என்று எச்சரித்து இருக்கிறார்.மேலும் “ஆளுநர் என்ற பதவி தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே தேவையில்லை என்பதே திமுகவின் நிலைப்பாடு” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்தது தவறு என்று குறிப்பிட்டுள்ள மு.க. ஸ்டாலின், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும் சில மத்திய அமைச்சர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதையும் பேட்டியில் ஸ்டாலின் சுட்டிக் காட்டியுள்ளார்.
“அமலாக்கத்துறையை தனது கிளை அலுவலகம் போல பாஜக மாற்றியதால் தான் , செந்தில் பாலாஜியை நீக்குவதில்லை என்று தான் எடுத்த முடிவு சரியானதே” என்றும் பேட்டியில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரிடம். செந்தில்பாலாஜியின் பதவி நீக்கம் “அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என்று விமர்சிக்கும் நீங்கள், அதிமுக ஆட்சியில் இருந்த போது அமைச்சர்கள் சிலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர்களை பதவி நீக்கம் செய்யுமாறு ஆளுநரிடம் வலியுறுத்தியிருந்தீர்கள். இது இரட்டை நிலை இல்லையா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு ஸ்டாலின், “அப்படி கோரிக்கை வைப்பது அரசியல் நடவடிக்கை. ஆனால் ஆளுநர் அரசியல்வாதியாகி விடக்கூடாது. அரசியலமைப்பு சட்டப்படி அவர் செயல்படவில்லை. வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை வழக்குகள் மற்றும் சோதனைகளை எதிர்கொண்ட அதிமுக அமைச்சர்கள், ஆட்சியில் இருந்த போதும் அதன் பிறகும் கூட கைது செய்யப்படவில்லை. ஆனால் அரசியல் பழிவாங்கல் காரணமாக வருமானவரித்துறை. செந்தில்பாலாஜியை குறி வைத்து சோதனை நடத்தியது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன் கொடுத்த புகாரின் பேரில் திடீரென அமலாக்கத்துறை அவரை மனிதாபிமானமற்ற முறையில் கைது செய்தது. 18 மணி நேரம் சித்திரவதை செய்ய வேண்டிய அவசியம் என்ன?
அவரது இதயத்தில் அடைப்புகளை அகற்ற அறுவை சிகிச்சை தேவைப்பட்டாலும் அமலாக்கத்துறை மனிதாபிமான மற்ற முறையில் நடந்துகொண்டது, அவருக்கு உடல் நிலை சரியில்லை என்பதே ஒரு நாடகம் என்று வாதிட்டது. அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாங்கள் உண்மையான மற்றும் முறையான சட்ட நடவடிக்கைகளுக்கு எதிரானவர்கள் அல்ல. அவற்றை சட்ட ரீதியாக எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளோம்” என்று ஸ்டாலின் பதில் அளித்து உள்ளார்.
இதையடுத்து “செந்தில்பாலாஜியை தார்மீக அடிப்படையில் அமைச்சரவையில் இருந்து நீக்கியிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறதே” என்ற கேள்வியும் ஸ்டாலின் முன் வைக்கப்பட்டது.
“இந்தியா முழுவதும் பல எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் எண்ணற்ற வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர். தண்டனை கிடைக்கும் வரை ஜெயலலிதா முதலமைச்சராக தொடர்ந்தார். சில பாஜக அமைச்சர்களின் தேர்தல் பிரமாணப் பத்திரங்கள் அவர்கள் வழக்குகளை எதிர்கொள்வதைக் காட்டுகின்றன. எனவே தார்மீக அடிப்படை ஒரு வழி பாதையாக இருக்க முடியாது. அரசியல் எதிரிகளை மிரட்டுவதற்காக அமலாக்கதுறை போன்ற விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துவதை அனைவரும் அறிவார்கள். எனவே தான் செந்தில் பாலாஜியை நீ்க்குவதில்லை என்ற நிலைப்பாட்டை நாங்கள் எடுக்க நேரிட்டது. இந்தப் பிரச்சினை செந்தில்பாலாஜி பற்றியது மட்டுமல்ல. நம் அரசியலமைப்பின் மூலம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் உரிமைகளுடன் தொடர்புடையது. இது எங்கள் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளுடன் ஒத்துப்போகிறது” என்று முதலமைச்சர் விரிவான அதே நேரம் அழுத்தமான பதிலை அளித்திருக்கிறார்.
இதையடுத்து ஸ்டாலினிடம் “செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள், வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கிய போது அவர்களை நீங்கள் கண்டித்தீர்களா?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதற்கு ஸ்டாலின் “அது தவறு, நான் அவரை கடுமையாக கண்டித்தேன். இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் கூட்டத்தை கலைத்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், பாஜகவின் கிளையாகச் செயல்படும் வருமானவரித்துறை உண்மையை மறைக்கிறது” என்று பதிலளித்து உள்ளார்.
000