அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட கடந்த இரண்டு நாட்களாக ஏராளமான கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன.
இந்த கேள்விகளில் முக்கியமானது அமலாக்கத்துறையால் கைதி என்று அறிவிக்கப்பட்ட பிறகு செந்தில் பாலாஜியை அவர் அனுமதிக்கப்பட்டு இருந்த ஓமந்தூரார் மருத்துவமனைக்குச் சென்று முதலமைச்சர் சந்தித்தது ஏன் என்பதுதான்.
இது தொடர்பாக சென்னையில் பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதைப் பார்க்கலாம்..
“இந்தாண்டு ஆஸ்கார் விருது கொடுத்தால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கொடுக்கலாம். என்னா நடிப்பு. உலகமகா நடிப்பு நடிக்கிறார். செந்தில் பாலாஜி நல்ல ஆம்பிளையாக இருந்தால் அழக்கூடாது. துணிச்சலாக கைது நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இருப்பதை டாஸ்மாக் ஊழியர்கள் தீபாவளி போன்று கொண்டாடுகிறார்கள். இதிலிருந்தே டாஸ்மாக்கில் அவர் என்ன செய்திருப்பார் என்பதை புரிந்து கொள்ளலாம்.
முன்பு 2 ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் கைது செய்யப்பட்ட போது போது கூட திமுகவினர் அமைதியாக இருந்தனர். யாரும் உடனே ஓடிப் போய் அவர்களைப் பார்க்கவில்லை.இப்போது செந்தில் பாலாஜி கைது செய்து வைக்கப்பட்டு இருக்கும் மருத்துவமனையை முதலமைச்சர், அமைச்சர்கள் எல்லாரும் சுற்றி சுற்றி வருகின்றன்னர். ஏனென்றால் தங்களுக்கு எதிராக செந்தில் பாலாஜி செயல்பட்டு விடுவாரோ என்று அவர்களுக்கு ஏற்பட்டு உள்ள பயந்தான் காரணம்”
இப்படி ஜெயக்குமார் பேட்டியில கூறியிருந்தார்.
பாஜக தலைவர் அண்ணாமலை பொதுக் கூட்டம் ஒன்றில் பேசுகையில், “செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் உதயநிதி ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று பார்த்ததே அமலாக்த் துறை விசாரணையின் போது தங்கள் பெயரை அவர் சொல்லிவிடக் கூடாது என்று கேட்டுக் கொள்வதற்குதான்” என்று கூறினார்.
இந்திய அரசியலைப் பொறுத்தவை தங்கள் கட்சியை சேர்ந்த ஒருவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு விட்டால் அவர்களுக்கு வேண்டியவர்களைச் சிறைக்குச் சென்று பார்ப்பது வாடிக்கை தான். இப்போது கர்நாடகத்தில் துணை முதலமைச்சாரக இருக்கும் டி.கே.சிவக்குமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமலாக்கத் துறையால் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெங்களூருக்கு வந்து சிறைக்குச் சென்று சிவக்குமாரை பார்த்து பேசிவிட்டுப் போனார். இப்படி ஏராளமான உதாரணங்கள் உள்ளன. அதனால் மருத்துவமனைக்குச் சென்று செந்தில் பாலாஜியை முதல்வர் பார்த்ததில் தவறு ஏதுமில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.
000