June 14, 23
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கோரி அவரது வழக்கறிஞர்கள் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு வாதிட்டனர். தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த மனு மீதான விசாரணையின்போது அமலாக்கத்துறை, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றவியல் சட்டம் பொருந்தாது, செந்தில் பாலாஜி தான் கைதாவார் என்று தெரிந்தே, மெமோவை வாங்க மறுத்துவிட்டார். அவரது சகோதரருக்கும், மனைவிக்கும் தொலைப்பேசி மூலம் தகவல் தெரிவிக்க முயன்றோம், அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை.
ரிமாண்ட் ஏற்றுக்கொள்ளப்பட்டதால், அதை வழங்கக் கூடாது என வாதிடுவது தவறு. திமுக வைக்கும் வாதம் ஏற்கும்படியாக இல்லை. குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன, அவற்றை சமர்பிக்கவும் தயாராக உள்ளோம். நாங்கள் சட்டவிதிகளை மீறவில்லை. உச்சநீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் தான் விசாரணை நடக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மறு விசாரணை நடத்துகிறோம். தனிப்பட்ட காரணங்களுக்காக அவரை கைது செய்யவில்லை என வாதிட்டது.
அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணையின் மீது அவரது வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தும் கைது செய்தது ஏன்? கைதுக்கு முன் நோட்டீஸ் அனுப்பவில்லை. கைதுக்கான காரணங்களை செந்தில் பாலாஜியிடமோ, அவரது குடும்பத்தினரிடமோ தெரிவிக்கவில்லை. செந்தில்பாலாஜி கைது நடவடிக்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன” எனக் குறிப்பிட்டார்.
செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை நீதிபதி அல்லி நாளைக்கு ஒத்திவைத்துள்ளார். அத்தோடு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என திமுக தாக்கலான மனுவையும் நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.