டிசம்பர்-25,
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலன் கண் முன்னே மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பழைய குற்றவாளி ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நேற்றிரவு காதலனுடன் பேசிக் கொண்டிருந்த மாணவி ஒருவருக்குதான் இந்த கொடுமை நடந்து இருக்கிறது. அங்கு வந்த 2 இளைஞர்கள் மாணவனை தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
மாணவன் கொடுத்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் விசாரணையைத் தீவிர படுத்தினர்.
கடைசியாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல் துறை தெரிவித்து உள்ளது.
கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (37) சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஆவார்.
அவர் தினமும் 7 மணிக்கு மேல் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்று இதே வேலையில் ஈடுபட்டு வந்துள்ளதும் தெரியவந்து உள்ளது.
தனிமையில் இருக்கும் காதலர்களை வீடியோ பதிவு செய்து, மிரட்டி பல்வேறு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது; அவரது செல்போனில் பல வீடியோக்களும் உள்ளன.
இவர் மீது ஏற்கனவே 15க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன. ஞானசேகரன் கோட்டூர்புரம் மண்டபம் தெருவில் பிரியாணி கடை நடத்தி வந்துள்ளதாகவும் காவல்துறை விளக்கி இருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில்
இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக்கழக அளவில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பதிவாளர் தெரிவித்து உள்ளார்.
நாட்டின் முன்னணி பல்கலைக் கழகம் ஒன்றில் மாணவிக்கு நேரிட்டு உள்ள கொடூரம் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடையச் செய்து இருக்கிறது.
*