சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவப் பணியாளர்களின் அலட்சியத்தால் ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகிவிட்டதை அடுத்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு உள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு ஒராண்டிற்கு முன்பு தலையில் நீர் கோத்திருந்த பிரச்னைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து டியூப் வைக்கப்பட்டது. டியூப் வெளியே வந்துவிட்டதை பெற்றோர் குழந்தையை மறுபடியும் சிகிச்சைக்கு கொண்டுவந்திருந்தனர். அப்போது குழந்தைக்கு கையில் சரியான முறையில் ட்ரிப்ஸ் செலுத்தாததால் கையில் வலி ஏற்பட்டு இரண்டு நாட்களாக அழுது கொண்டிருந்ததாக பெற்றோர் தெரிவித்தனர்.
உடனே குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு கை அழுகியிருந்ததை கண்டுபிடித்தனர். இது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அலட்சியத்தால் நிகழ்ந்தது என்பது பெற்றோரின் புகாராகும். இதையடுத்து அந்த குழந்தையின் வலது கையை அறுவை சிகிச்சை மூலம்அகற்றியுள்ளனர்.
முறையான சிகிச்சை அளிக்காததால் குழந்தையின் கை பாதிக்கப்பட்டதா என்பதை அறிய குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார்.
சில மாதங்கள் முன்பு சென்னை கொளத்தூரை சேர்ந்த 17 வயது கால்பந்தாட்ட வீராங்கனை, அரசு மருத்துவமனையில் செய்யப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது ஒன்றரை வயது குழந்தை மருத்துவ அலட்சியத்தால் ஒரு கையை இழக்க நேரிட்டுள்ளதும் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது.
000