ஆகஸ்டு,06-
சென்னை மதுரவாயலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் இடையேயான 23 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேம்பாலம் கட்டுவதற்கான பணிகளை இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) இந்த ஆண்டுக்கான வேலைத் திட்டத்தில் ₹3,500 கோடி செலவுப் பிடிக்கும் இந்தத் திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள மேடை (center median) மீது தூண்கள் எழுப்பப்பட்டு அதன் மீது இந்த பாலம் கட்டப்படும். இ்ந்த ஆறு வழிச்சாலைக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது, இன்னும் ஓரிரு மாதங்களில் டெண்டர் கோர முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
அதாவது சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரையிலான 19 கிலோ மீட்டர் தொலைவுக்கான உயர் மட்டச் சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு 10 சதவிகித வேலைகள் நடைபெற்ற பிறகு நிறுத்தப்பட்டுக் கிடப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். நெடிய போராட்டங்களுக்குப் பிறகு இந்த உயர் மட்டச் சாலைக் கட்டுமானப் பணிக்கான தொடக்க விழா இந்த மாதக் கடைசியில் நடைபெறும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
துறைமுகம்- மதுரவாயல் உயர்மட்டச் சாலை என்பது இரண்டு அடுக்குகளைக் கொணடதாக இருக்கும். முதல் அடுக்கில் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களும் அதற்கு மேல் அடுக்கில் லாரிகள் செல்லும் வகையிலும் கட்டப்பட உள்ளது. துறைமுகத்தில் தொடங்கி மதுராவாயலில் உயர்மட்டச் சாலை முடிவடையும் இடத்தில் இருந்துதான் ஸ்ரீ பெரும்புதூர் வரையிலான 23 தொலைவுக்கு மேல்பாலம் கட்டப்பட இருக்கிறது.
மதுரவாயலில் இருந்து சென்னை வெளிவட்டச் சாலை வரையிலும்,(நசரத் பேட்டை) அந்த இடத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரையிலும் இரண்டு தொகுப்புகளாக கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த மேம்பாலம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடிக்கு முன்னால் நெடுஞ்சாலையை சேரும்.
திட்டமிட்டப்படி மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் போது மதுரவாயலில் இருந்து செல்லும் வாகனங்களில் 80 சதவிகித வாகனங்கள் பாலத்தின் மேலே செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதால் இப்போது உள்ள சாலையில் நெரிசல் இருக்காது. சென்னை – ஸ்ரீபெரும் புதூர் இடையே பயண நேரம் வெகுவாக குறைந்து விடும்.
படிப்பதற்கு நன்றாக இருந்தாலும் பயன்பாட்டு்க்கு எப்போது வரும் என்ற ஏக்கந்தான் மிஞ்சுகிறது
000