சமூக வலை தளங்களில் முன்னணியில் இருக்கும் முகநூலுக்கும் டுவிட்டருக்கும் இடையே ஏற்பட்டுள்ள தொழில் போட்டி சுவாரசியமாக உள்ளது.
மூன்று, நான்கு விரிகளில் தகவல்களைப் பகிரக்கூடிய டுவிட்டர் உலகம் முழுவதும் பிரபலமான சமூக ஊடமாக விளங்குவது அனைவருக்கும் தெரிந்ததுதான். இதனை உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் நான்கைந்து மாதங்களுக்கு முன்பு வாங்கியதும் அறிந்ததுதான். அதன் பிறகு ப்ளு டிக்குக்கு கட்டணம், ஒருவர் ஒரு நாளைக்கு இவ்வளவு டுவிட்டுகளை படிக்க முடியும் போன்ற கட்டுப்பாடுகளை அவர் விதித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
சமூக வளைத்தளத்தில் தனக்கு என்று தனி இடத்தை தக்க வைத்து இருக்கும் டுவிட்டருக்குப் போட்டியாக ‘திரெட்ஸ்’ எனும் வலைதளம் இரு தினங்கள் முன்பு ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. இது வரை ஐந்து கோடி பேர் திரெட்ஸ் உடன் இணைந்து கணக்கை தொடங்கி விட்டனர். இந்த திரட்ஸை ஆரம்பித்து இருப்பது முக நூலை நடத்தும் மெட்டா நிறுவனம் ஆகும்.
எலான் மஸ்கின் வழக்கறிஞர் அலெக்ஸ் ஸ்பிரேல “டுவிட்டரின் வியாபார ரகசியங்கள் மற்றும் அறிவுசார் சொத்துக்களை மெட்டா சட்டவிரோதமாக பயன்படுத்தியிருக்கிறது. எங்களின் ரகசியங்களை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பர்க்கிற்கு எழுதியிருக்கும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து, “போட்டி நல்லது ஆனால் ஏமாற்றுவது நல்லதல்ல” என ஒரு டுவிட் போட்டு உள்ளார்.
இதற்கு மெட்டா செய்தித்தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் தமது திரெட்ஸ் பதிவில் “திரெட்ஸ் வலைதளத்திற்காக பணியாற்றும் பொறியியல் குழுவினர் இதற்கு முன்பு டுவிட்டர் ஊழியர்களாக இருந்ததில்லை ” என்று தெரிவித்திருக்கிறார்.
டுவிட்டர் நிறுவனம் அவ்வப்போது பிரச்சினைகளை சந்தித்தாலும் கூட சமூகவலைதளங்களில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு முறையும் போட்டியாளர்கள் உருவானாலும் கூட யாரும் டுவிட்டரை வெல்ல முடியவில்லை. ஆனால் மெட்டா நிறுவனத்தின் திரெட்ஸ், டுவிட்டருக்கு மிகப்பெரிய போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரெட்ஸ் வலைதளத்தில், பயனர்கள் தங்கள் உரை மற்றும் இணைப்புகளை பதிவிடலாம். மேலும் மற்றவர்கள் அனுப்பும் செய்திகளுக்கு பதிலும் அளிக்கலாம், மறுபதிவும் செய்யலாம். டுவிட்டர் பயன்படுத்துகிறவர்களுக்கு கிடைக்கக் கூடிய வசதிகள் பலவும் திரெட்ஸ் பயனாளிகளுக்கும் கிடைக்கிறது.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம், முகநூல் ஆகிய இரண்டும் போட்டியாளர்களின் தயாரிப்புகளை அப்படியே காப்பியடித்து உருவாக்கப்பட்டதாக ஏற்கனவே விமர்சனங்கள் உள்ளன. அதே போன்று டுவிட்டரை காபி அடித்து திரெட்ஸ் உருவாக்கப்பட்டு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இரு அமெரிக்க பெரு நிறுவனங்களும் இந்த மோதலை எப்படி சமாளிக்கப் போகின்றனவோ?
000