மே.31
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அக்னிநட்சத்திரத்தால் கடுமையான வெயில் வாட்டியெடுத்தது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி கொளுத்திய நிலையில், அவ்வப்போது பல இடங்களில் மழையும் பெய்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 30ம் தேதியுடன் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்த நிலையிலும், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. சுட்டெரிக்கும் வெப்பத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.