மே.1
தமிழகத்தில் வேலூர் உள்பட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டியெடுத்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்துவருகிறது. இதன் தொடர்ச்சியாக, தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், இன்று (மே.1) முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், தர்மபுரி, நீலகிரி, ஈரோடு, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால், அங்கு நிர்வாக ரீதியாக ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நாளை (மே.2) ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், நாளை மறுநாள் (மே.3) வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தர்மபுரி, பெரம்பலூர், திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.