May 28, 2023
குடிமகனாகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் புதிய கட்டிட திறப்புவிழாவை மகிழ்ச்சியுடனுடம் ஆவலுடனும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். – இளையராஜா
தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி என்று நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார். புதிய நாடாளுமன்றம் நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இதில், 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று இரவு, தமிழ்நாட்டின் திருவாவடுதுறை மடத்தின் ஆதீனங்களிடமிருந்து இந்தியாவின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேரு பெற்றுக்கொண்ட செங்கோலினை நாளை பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றத்தில் நிறுவவிருக்கிறார். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு செங்கோலினை வழங்குவதற்கான 20-க்கும்மேற்பட்ட ஆதீனங்களின் தலைவர்கள் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
தொடர்ந்து பிரதமர் மோடிக்கு ஆதீனங்கள் நேரில் ஆசி வழங்கி, செங்கோல்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். அதன்படி ஆதீனங்களிடம் இருந்து செங்கோலினை பிரதமர் நரேந்திர மோடி இன்று பெற்றுக்கொண்டார். இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் – செங்கோல். தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.’ என்று கூறியுள்ளார்.
முன்னதாக இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘பிரதமர் நரேந்திர மோடி நாளை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்துவைக்கிறார். குடிமகனாகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் புதிய கட்டிட திறப்புவிழாவை மகிழ்ச்சியுடனுடம் ஆவலுடனும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்த குறுகிய காலத்தில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த கட்டிடத்தை கட்டிமுடிக்க துணைபுரிந்த பிரதமர் மோடி, மத்திய அரசு உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள். மதிப்பிற்குரிய செங்கோலை (பழங்கால தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பெருமை) கொண்ட அரச குடும்பத்தினர் அவர்களின் வெற்றிகரமாக ஆட்சி செய்தவர்கள் செங்கோலை நீதி, ஒழுங்கு, நேர்மை மற்றும் நெறிமுறைகளின் அடையாளமாக போற்றினர். இத்தகைய செங்கோல் சரியான இடத்துக்கு திரும்ப வந்திருப்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.