டாடா நிறுவனம் சார்பில் இந்திய அளவில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் நெல்லை மாணவி ஹிஸானா முதல் இடத்தைப் பிடித்துள்ளார். குடியரத்தலைவர் தலைமையில் நடைபெற்ற விழாவில் இதற்கான விருதும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனம் சிறப்பான இந்தியாவை உருவாக்குதல் என்ற தலைப்பில் இந்திய அளவில் கட்டுரை போட்டிகளை நடத்தியது. இந்தியா எல்லா வகையிலும் வளமான நாடாக மாற்றுவதற்கு இளம் தலைமுறையினரிடம் இருந்து இந்தக் கட்டுரை போட்டி மூலம் யோசனைகள் பெறப்பட்டது.
இந்த போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 7500 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழ் உட்பட 13 மொழிகளில் இந்தக் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.
இதில் தமிழகத்தில் இருந்து நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியை சேர்ந்த ஹிஸானா என்ற மாணவி கலந்து கொண்டு, தமிழ் மொழியில் கட்டுரை எழுதி இந்திய அளவில் முதலிடத்தை பிடித்தார். அவருக்கு இந்திய குடியரசு தலைவர் தலைமையில் டெல்லியில் நடந்த விழாவில், விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இந்தியாவை வல்லரசாக்குவதற்கு தனது யோசனையை, தமிழ் மொழியில் கட்டுரை மூலம் அளித்த நெல்லை மாணவி ஹிஸானாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது