முன்பெல்லாம் சென்னையில் உள்ள ஸ்டூடியோக்களில்தான் தமிழ் உள்ளிட்ட தென்னகப்படங்களின் ஷுட்டிங் நடைபெறும். நாளாவட்டத்தில் சென்னையில் இருந்த ஒரு டஜனுக்கும் மேற்பட்ட ஸ்டூடியோக்கள் மூடப்பட்டன.
அவை கல்யாண மண்டபங்களாகவும், அடுக்கு மாடிக் குடியிருப்புகளாகவும் வடிவம் கொண்டன.
ஐதராபாத், திருவனந்தபுரம், பெங்களூரு போன்ற ஊர்களில் புதிதாக கட்டப்பட்ட ஸ்டூடியோக்களில்,அங்குள்ள மொழிப்படங்களின் படப்பிடிப்பை, நடந்த ஆரம்பித்தனர். ஐதராபாத்தில் உருவான ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நவீன வசதிகள் உள்ளதால், பெரிய தமிழ் படங்களின் ஷுட்டிங்குகளும் அங்கு நடத்தப்படுகின்றன, இதனால் தமிழ் சினிமா தொழிலாளர்கள் வேலை பறி போயிற்று.
இந்நிலையில் ,தமிழ்படங்களின் படப்பிடிப்பை தமிழகத்திலேயே நடத்த வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளமான ”பெப்சி’ கோரிக்கை விடுத்துள்ளது.
பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி , பொதுச்செயலாளர் பி.என்.சுவாமிநாதன், பொருளாளர் எஸ்.பி.செந்தில்குமார் ஆகியோர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:
’’திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமும் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் கையெழுத்திட்ட ஒப்பந்ததை முழுமையாக பின்பற்ற வேண்டும். தமிழ் திரைப்படங்களில் தமிழகத்தில் உள்ள கலைஞர்களை, தொழிலாளர்களை, தொழில்நுட்பக் கலைஞர்களை பயன்படுத்த வேண்டும்.
தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பை தமிழகத்திலேயே நடத்திட வேண்டும். அவசியம் ஏற்பட்டால் ஒழிய வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.’’
ஃபெப்சியின் வேண்டுகோளை பிரமாண்ட இயக்குநர்கள், பெரிய தயாரிப்பாளர்கள் ஏற்றுகொள்வார்களா? என்பது தெரியவில்லை.
000