தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் சேவை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பொதுமக்கள் பயணத்திற்கு என்று பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்து சேவைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. இந்த நிலையில், உலகத் தரத்தில் தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் சேவை விரைவில் கொண்டுவரப்படவுள்ளது. தமிழ்நாட்டிற்குள் இருக்கும் கிராம மற்றும் நகர்ப் பகுதிகளுக்குச் செல்லும் வகையில் இந்த ஹெலிகாப்டர் சேவை அமையவுள்ளது.
இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “நகரங்களுக்கு இடையேயான வான்வெளி பயணத்திற்கு ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த உதவும் வகையில், தமிழ்நாடு வான்வழி இணைப்புத் திட்டத்திற்கான வழிமுறை வகுக்கப்படும். இந்தியாவிலேயே, தமிழ்நாடு மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாகும். நம் மாநிலத்தின் பொருளாதார மேம்பாட்டில் வணிகப் பயணம் மற்றும் மருத்துவம், பொழுது போக்கு, சுற்றுலா போன்ற பயணங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. தமிழ்நாடு நல்ல சாலை மற்றும் ரயில் இணைப்புகளைக் கொண்டிருந்தாலும், விமான இணைப்பு வசதி தற்போது சென்னை, கோவை, திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய 5 நகரங்களில் மட்டுமே உள்ளது. நகரங்களுக்கு இடையேயான வான்வெளி பயணத்திற்கு ஹெலிகாப்டர்களை பயன்படுத்த உதவும் வகையில், அரசுத் துறைகள் ஹெலிபேட் ஆபரேட்டர்கள், ஹெலிகாப்டர் ஆபரேட்டர்கள் ஆகியோருக்கு தேவையான வழிகாட்டுதல்களை டிட்கோ நிறுவனம் உருவாக்கும். இந்த வழிகாட்டு முறை மூலம், NCAP மற்றும் இந்திய அரசின் ஹெலிகாப்டர் கொள்கையின் கட்டமைப்பிற்குள் செயல்படும்.
ஹெலிகாப்டர் இயக்கத்திற்கான நிர்வாக வழிகாட்டியாக இருக்கும் “ஹெலி திஷா மற்றும் ஹெலிகாப்டர் செயல்பாட்டிற்கு இணைய வழியில் அனுமதி வழங்குவதற்கான ஹெலி சேவா இணையதளம் ஆகியவற்றின் தொடர்ச்சியாக இந்த வழிகாட்டுதல்கள் இருக்கும். இதன் மூலம், செயல்பாட்டில் இல்லாத ஹெலிபேடுகளை கண்டறிந்து, ஹெலிகாப்டர் ஆபரேட்டர்கள் மூலம் நகரங்களுக்கு இடையேயான வான்வெளி இணைப்பை மேம்படுத்த முடியும். இவ்வழிமுறையானது, தமிழ்நாட்டின் வான்வெளி தொழில் துறைக்கு வலிமை சேர்ப்பதுடன், பயன்பாட்டில் இல்லாத ஹெலிபேடுகளை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து, அதன் மூலம் நிதி திரட்டவும் தமிழ்நாட்டில் வான்வெளி போக்குவரத்தை மேம்படுத்தவும் பயன்படும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.