திண்டுக்கல் என்றதும், அதிமுகவினருக்கும், அந்தக்கால அரசியல் வாதிகளுக்கும் நினைவுக்கு வருவது, 70 -களில் நடைபெற்ற இடைத்தேர்தலும்,மாயத்தேவரும்தான்.
அது-
எம்.ஜி.ஆர்., அதிமுகவை ஆரம்பித்திருந்த நேரம். திண்டுக்கல் மக்களவை தொகுதி திமுக எம்.பி.ராஜாங்கம் மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு (1973 ஆம் ஆண்டு ) இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
திமுகவில் இருந்து அப்போது தான் எஸ்.டி.சோமசுந்தரம் , அதிமுகவுக்கு வந்திருந்தார்.அவர் அந்த சமயத்தில் , மக்களவை எம்.பி.யாக இருந்தார்.
தனக்கு அடுத்த நிலையில், சோமசுந்தரத்தை ,எம்.ஜி.ஆர் வைத்திருந்தார்.
திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவது என எம் ஜி ஆர் முடிவு செய்தார். கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் அதனை ஏற்றுக்கொண்டனர்.
வேட்பாளராக யாரை நிறுத்துவது என எம் ஜி ஆர் பல தரப்பினரிடமும் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார்.
கட்சிக்குள் செல்வாக்கு பெற்றவராக உலா வந்த எஸ்.டி.எஸ்,, தனது நண்பரான சேடப்பட்டி முத்தையாவை, அந்த தேர்தலில், , அதிமுக வேட்பாளராக நிறுத்துவதற்கான ஆயத்தங்களை, ரகசியமாக செய்து வந்தார்.
திண்டுக்கல் தொகுதி முழுக்க அதிமுக சார்பில் ஊழியர் கூட்டங்கள் நடத்தப்பட்டன. எஸ்.டி.எஸ்.தான் முன்னின்று நடத்தினார்.அந்த கூட்டங்களில் எல்லாம் , சேடப்பட்டி முத்தையா தான் வேட்பாளர் என சொல்லப்பட்டன.இதெல்லாம் எம் ஜி ஆருக்கு தெரியாது.
கடைசி நேரத்தில் மாயத்தேவர் வேட்பாளர் ஆனார்.இதற்கு பின்னணியில் இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அங்குள்ள பரவையை சேர்ந்த வீரண்ணன் என்பவர் , வீரப்பனின் நெருங்கிய நண்பர். அவரிடம் ,’அந்த பகுதியில் நன்கு படித்த, யாரேனும் உள்ளனரா? என வீரண்ணனிடம் விசாரிக்க சொன்னார், வீரப்பன்.
வீரண்ணன் விசாரித்து, மாயத்தேவரை வீரப்பனிடம் பரிந்துரை செய்தார். அவர் குறித்த அத்தனை விவரங்களையும் வீரப்பனுக்கு அனுப்பினார்.
வீரப்பனுக்கு பரம திருப்தி.
உடனடியாக மாயத்தேவரை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வரச்சொன்னார்.
அவரும் வந்தார். ஏற்கனவே மாயத்தேவரின் பயோ -டேட்டாவை, எம் ஜி ஆரிடம் கொடுத்திருந்தார், வீரப்பன். எம் ஜி ஆரும் திண்டுக்கல்லில் உள்ள நிர்வாகிகளுடன் பேசி இருந்தார்.
கட்சி அலுவலகத்தில் மாயத்தேவரை, எம் ஜி ஆருக்கு அறிமுகம் செய்து வைத்தார், ஆர்.எம். வீரப்பன். அதன் பின்னரே திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளராக மாயத்தேவரை, எம் ஜி ஆர் , அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதனால் எஸ்டி எஸ், ‘அப்செட்’ . ஆனது தனிக்கதை.
—