ஜுலை,26-
மணிப்பூரில் பெண்களுக்கு நிகழும் கொடூரங்களை கண்டித்து தென்காசியில் இரு தினங்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட திமுக. செயலாளர் சிவபத்மநாதன் பங்கேற்றுப் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வியும் கலந்து கொண்டார். இருவருக்கும் இடையே சில மாதங்களாகவே சுமுக பேச்சுவார்த்தை இல்லை.மேடையில் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை. சிவபத்மநாதன் பேசி முடித்ததும், தமிழ்செல்வி பேச எழுந்தார். ஆனால் அவரை பேசவிடாமல் சிவ பத்மநாபன் தடுத்து மைக்கை பறித்தார் ஆத்திரம் அடை.ந்த தமிழ்செல்வி சிவ பத்மநாபனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தமிழ்செல்வியின் ஆதரவாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கோஷம் எழுப்பினர்.இந்த மோதல் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இதனை பார்த்த கட்சி தலைமை அதிர்ச்சி அடைந்தது.
சிவபத்மநாதன் மீது ஏற்கனவே பல புகார்களை அண்ணா அறிவாலயத்துக்கு கட்சிக்காரர்கள் அனுப்பி இருந்தனர்..
இப்போது பெண் நிர்வாகியிடம் அவர் மோதிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி , கட்சிக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் அதிரடியாக தூக்கி அடிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
அதில்,’தென்காசி தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த பொ.சிவபத்மநாதன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்குப் பதிலாக தென்காசி தெற்கு மாவட்ட புதிய பொறுப்பாளராக, சுரண்டை நகரச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் ஜெயபாலன் நியமனம் செய்யப்படுகிறார்’’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இதுபோல் ஒழுங்கீனமாக செயல்படும் நிர்வாகிகளை களை எடுக்கும் நடவடிக்கையில் கட்சி தலைவர் ஸ்டாலின் ,தீவிரம் காட்டி வருகிறார். கடந்த மாதம், சில புகார்களுக்கு ஆளான நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் வகாப் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
000