மே.10
தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியை கண்டு சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விமர்சித்துள்ளார்.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய்த்துறை, பள்ளி கல்வித்துறை, தோட்டக்கலைத்துறை, சமூக நலம், கூட்டுறவு துறை, ஆதிதிராவிடர், மின்சாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 980 பேருக்கு ரூ.11.73 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நாடுளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் பிரதாப், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று திமுக ஆட்சியின் ஈராண்டு சாதனை மலரை வெளியிட்டனர்.
அப்போது, அனைத்து துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார். பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழகத்தில் 2 ஆண்டு காலத்தில் இந்த வார்டில் மட்டும் 3.5 கோடி மதிப்பிலான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கோவை மாநகர பகுதியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியில் 11 கோடியே 73 லட்சம் மதிப்பிலான நல திட்டம் வழங்கப்படுகிறது. திராவிட மாடல் ஆட்சியில் சிலருக்கு சந்தேகம் வருகிறது. ஒரு சிலருக்கு வயிற்று எரிச்சல் வருகிறது. பெண்கள் காலை உணவு செய்து பணிக்கு போக வேண்டும். இதனால் காலை உணவு திட்டத்தை முதல்வர் வழங்கி உள்ளார். 1.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி உள்ளோம்.
ஐடி நிறுவனம் பெங்களூருவுக்கு சென்று விட கூடாது என கோவைக்கு 9,000 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 200 ஏக்கர் நிலப்பரப்பில் டெக் சிட்டி வர உள்ளது. செம்மொழி பூங்கா வர உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.