திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பங்குனித் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷங்கள் எழுப்பியவாறு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தமிழ் கடவுள் முருகப் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. இந்த விழா கடந்த மார்ச் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, நாள்தோறும் காலை மற்றும் மாலையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்க சப்பரத்திலும், தங்க மயில், தங்க குதிரை, வெள்ளி பூத வாகனம், ஆட்டுக்கிடா வாகனம், யானை வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 1-ந்தேதி கைப்பார நிகழ்ச்சியும், 5-ந்தேதி பங்குனி உத்திரமும், 7-ந்தேதி பட்டாபிஷேகமும், நேற்று திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. இந்த நிலையில், இன்று மகா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. கோவில் வாசல் முன்பு 5 அடுக்குகளாக வண்ணமயமான அலங்கார துணியை கொண்டு அலங்கரிக்கப்பட்டு பெரிய தேர் தயாரானது.

தேரோட்டத்தையொட்டி அதிகாலை 5.40 மணிக்கு உற்சவர் சன்னதியில் இருந்து மேள தாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு காவல் தெய்வமான கருப்பசாமி சன்னதிக்கு வந்து, அங்கு சிறப்பு பூஜை நடந்தது. இதனையடுத்து, தெய்வானையுடன் முருகப்பெருமான் பெரிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் தேரின் சக்கரத்தில் தேங்காய் சூறைவிடப்பட்டு தொடங்கப்பட்டது.

அதன்பிறகு கோவில் வாசலில் இருந்து காலை 6.25 மணி அளவில் தேர் புறப்பட்டது. அங்கு திரளாக கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா’ என்று கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

விநாயகர் எழுந்தருளிய சிறிய சட்டத்தேரானது பெரிய தேருக்கு முன்பாக சென்றது. அதை ஏராளமான பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். சிறிய சட்டத்தேரும், பெரிய தேரும் ஒன்றன்பின் ஒன்றாக கிரிவல பாதையில் ஆடி, அசைந்து பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றது. திருப்பரங்குன்றம் மலையை 3 கி.மீ. சுற்றளவு கொண்ட கிரிவல பாதையில் 5 மணி நேரம் வலம் வந்த தேர், காலை 11:30 மணி அளவில் மீண்டும் கோவில் வாசலுக்கு வந்துசேர்ந்தது. அப்போது, நேர்த்திக்கடனாக வாழைப்பழங்களை சூறைவிட்டு முருகப்பெருமானை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்தத் தேரோட்டத்தையொட்டி, திருப்பரங்குன்றம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்து.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *