திருப்பூர் அருகே சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், கரட்டாங்காடு பகுதியில் அனுமதியின்றி முறைகேடாக நடத்தப்பட்டுவந்த கிளினிக்கிற்கு சீல் வைத்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமல் இயங்குகின்ற மருத்துவமனைகள் மற்றும்கிளினிக்குகள், மருந்தகங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் அடையாளம் கண்டு, நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், திருப்பூர்-தாராபுரம் சாலையில் உள்ள கரட்டாங்காடு பகுதியில் யஷ்வந்த் என்ற கிளினிக் முறைகேடாக செயல்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் வினீத்திற்கு புகார் வந்தது. அது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர், சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் கனகராணி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாபு, அலுவலக கண்காணிப்பாளர் ரமேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று யஷ்வந்த் கிளினீக்கில் ஆய்வு செய்தனர். அப்போது, கடந்த 2019ஆம் ஆண்டு வேறு ஒருவரின் பெயரில் உரிமம் பெற்று, அண்ணாத்துரை என்பவர் பயன்படுத்தி சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அண்ணாத்துரை ஆயுர்வேத மருத்துவம் படித்துவிட்டு, அலோபதி சிகிச்சை அளித்து வந்ததும் உறுதிசெய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, உரிய அனுமதி பெறாமல் முறைகேடாக செயல்பட்ட கிளினீக்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.