June 02, 2023
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் புகார் தெரிவித்த மல்யுத்த வீராங்கனைகள், டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு வீரர்களும் ஆதரவு தெரிவித்து போராடி வருகின்றனர்.
கடந்த 28-ம் தேதி புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற வீராங்கனைகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், பதக்கங்களை கங்கை நதியில் வீசுவோம் என்று மத்திய அரசுக்கு வீராங்கனைகள் எச்சரிக்கை விடுத்தனர். மல்யுத்த வீரர்களுக்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன.
இதனிடையே 1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில், முதல் உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் வீராங்கனைகள் நடத்தப்படும் விதம் கவலை அளிப்பதாகவும், மன வேதனை தருவதாகவும் உள்ளது. பல வருட முயற்சி, தியாகம், மற்றும் மன உறுதி ஆகியவற்றால் கிடைத்த பதக்கங்களை தூக்கி எறிவது போன்ற கடினமான முடிவுகளை மல்யுத்த வீரர்கள் எடுக்க வேண்டாம் என கோரிக்கை வைக்கிறோம். அவை நமது தேசத்தின் பெருமை.
இந்த விஷயத்தில் அவசர முடிவு எடுக்க வேண்டாம் என மல்யுத்த வீராங்கனைகளை கேட்டுக்கொள்கிறோம். மேலும் அவர்களின் குறைகள் கேட்கப்பட்டு, விரைவில் தீர்க்கப்படும் என நம்புகிறோம். சட்டம் மேலோங்கட்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.