ஏப்ரல்.18
துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
துபாய் நாட்டின் தேராவின் அல் ராஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் கடந்த சனிக்கிழமையன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 16 பேர் உயிரழந்தனர். 9 பேர் காயமடைந்தனர். கட்டிடத்தின் 4-வது மாடியில் ஏற்பட்ட தீ, மற்ற பகுதிகளுக்கும் பரவியதில், அப்பகுதியை கரும்புகை சூழ்ந்ததால், அங்கிருந்தவர்கள் வெளியேற முடியாமல் திணறினர். பின்னர் அங்கு சென்ற துபாய் தீயணைப்புப் படையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். அதில், தமிழகத்தைச் சேர்ந்த அப்துல் காதர், சாலியாகுந்த் ஆகிய 2 ஆண்களும் பலியாயினர்.
இந்நிலையில், துபாய் தீவிபத்தில் பலியான தமிழர்கள் 2 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் “டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த இமாம் காசீம், மற்றும் அதேபகுதியைச் சேர்ந்த முகமது ரபிக் தபெ.சலியாகுண்டு ஆகிய இருவரும் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்கு கொண்டுவருவதற்கு இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.