மே.4
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் பரவலாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கடைசி வாரம் தொடங்கி, வைகாசி மாதம் முதல் வாரம் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தை அக்னிநட்சத்திர காலம் அல்லது கத்திரி வெயில் காலம் என அழைக்கின்றனர். அதன்படி, இந்த ஆண்டுக்கான கத்திரி வெயில் இன்று (சித்திரை மாதம் 21-ந் தேதி) தொடங்கி, வைகாசி 14-ந் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்னிநட்சத்திர காலமாக அறிவிக்கப்பட்ட இந்த 25 நாட்களும், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்றும், மக்கள் வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு சூரியனின் கதிர்கள் சுட்டெரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது
இதனிடையே, தமிழகத்தில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி தொடர்ந்து நிலவுவதாலும், காற்றில் ஈரப்பததத்தின் அளவு கூடியிருப்பதாலும், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்துள்ளது.
இருப்பினும், இன்று அக்னி நட்சத்திரம் தொடங்குவதால், இந்த கால கட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்க வாய்ப்புள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அக்னியின் தாக்கத்திலிருந்து விடபட, வெயில் நேரத்தில் வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், உடல் சூட்டை தணிக்கும் வகையிலான உணவுகள், பழச்சாறுகளை எடுத்துக்கொள்வதோடு, அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.