அருணாச்சல பிரதேச விவகாரத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. அந்தப் பகுதியை தனக்கு சொந்தமானது என்று தொடர்ந்து கூறி வருகிது சீனா. அதுமட்டுமல்லாமல் எல்லைப் பகுதியில் சில இடங்களையும் ஆக்கிரமித்து, அந்தப்பகுதிகளில் பல்வேறு கட்டுமானங்களை நிறுவி வருகிறது. இந்த நிலையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ஊர்களின் பெயர்களை மாற்றும் செயலை மீண்டும் செய்துள்ளது சீனா.
இதுபோல பெயர் மாற்றும் வேலைகளை கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து சீனா செய்து வருகிறது. சீனாவின் இந்த செயலிற்கு இந்தியா தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது. ஏற்கனவே அருணாச்சலப்பிரதேசத்திற்கு ஜாங்னான் என்று பெயர் சூட்டி, அதை தெற்கு திபெத் என்று அழைத்து வருகிறது சீனா. அண்மையில் இந்தியா தலைமையில் நடைபெற்ற ஜி-20 மாநாடு அருணாச்சலப் பிரதேசத்தில் தான் நடைபெற்றது. அதை சீனா புறக்கணித்தது.
ஜி-20 மாநாடு முடிந்து சில நாட்களிலேயே இந்தியாவுக்கு சொந்தமான மாநிலத்தில் உள்ள ஊர்களின் பெயர்களை தங்கள் விருப்பம் போல மாற்றி உள்ளது சீனா. தற்போது அருணாச்சலில் இருக்கும் 11 ஊர்களின் பெயர்களை சீனா மாற்றி உள்ளதாக அந்நாட்டு உள்விவகாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சீனா இது போன்ற செயலில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல என்றும், தொடரும் சீனாவின் அத்துமீறல்கள் இந்தியாவின் ஒருமைப்பாட்டை ஒன்றும் செய்ய முடியாது என்றும் இந்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா என்னதான் செய்தாலும், அருணாச்சலப் பிரதேசம் ஒருங்கிணைந்த இந்தியாவின் ஒரு பகுதிதான் என மத்திய அரசு உறுதியாக கூறியுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு வரும் ஜூலை மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின் பிங் கலந்து கொள்ள உள்ளார். அது குறித்த ஏற்பாடுகளை கவனிப்பதற்காக இன்னும் ஒரு வாரத்தில் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் இந்தியா வர இருக்கிறார். இந்த நிலையில் சீனா இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் இரண்டு நிலப்பரப்பு பகுதிகள், இரண்டு குடியிருப்பு பகுதிகள், ஐந்து மலைச் சிகரங்கள், இரண்டு ஆறுகள் உள்ளிட்ட 11 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியுள்ளது. இதில் ஒன்று அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகர் இட்டாநகருக்கு மிக அருகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊர்களின் பெயர்கள், அந்த ஊர்களின் நிர்வாக விபரம் உள்ளிட்டவைகளையும் சீனா அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் ஆறு இடங்களின் பெயர்களையும், 2021 ஆம் ஆண்டு 15 ஊர்களின் பெயர்களையும் சீனா மாற்றியது. தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் சீனாவிற்கு மத்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.