எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய இயக்குநர்களான நாகராஜன், பந்துலு, பீம்சிங், . பாலசந்தர், மாதவன், திருலோகசந்தர், உள்ளிட்ட பலர் , காமிராவுக்கு பின்னால் நின்று நடித்தார்கள்.
அவர்கள் ஒருபோதும் அரிதாரம் பூசிக்கொள்ளவில்லை. நடிப்பை இன்னொரு தொழிலாக அவர்கள் ஏற்றதில்லை.
நடிகர்களுக்கு இருந்த மவுசு, பிற்காலத்தில் பல இயக்குநர்களை, அரிதாரம் பூச வைத்தது. இதற்கு வழிகாட்டியாக இருந்தவர் பாரதிராஜா. தான் டைரக்ட் செய்த ‘கல்லுக்குள் ஈரம்’ என்ற படத்தில் அவர் நாயகனாக உருமாறினார்.
அந்தப் படம் சரியாக போகாததால், பாரதிராஜா பல ஆண்டுகள் நடிக்கவில்லை. அண்மைக்காலமாக அவர், சினிமாக்களில் அண்ணன், அப்பா வேடங்களில் நடித்து வருகிறார்.
ஹீரோவாகவும், இயக்குநராகவும் வெற்றிக்கொடி நாட்டிய முதல் நடிகர் பாக்யராஜ். ரஜினிகாந்த் , கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களின் வசூலை முறியடித்தது அவரது பல படங்கள்
பாக்யராஜை அடுத்து ,இரட்டை குதிரையில் பயணித்து , ஜொலித்த மற்றொரு டைரக்டர் டி.ராஜேந்தர்.
இவர்கள் இருவருக்கும் அடுத்து, பெரிய அளவில், நடிகராக ஜெயம் அடைந்தவர் எஸ்.ஜே. சூர்யா. இவர் தற்செயலாக , திடீரென ஹீரோ அவதாரம் எடுக்க நேர்ந்தது.
‘நியூ’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர், அஜித்குமார் தான். படத்தின் கதை பிடிக்காததால் நடிக்க மறுத்து விட்டார் .இதனால் எஸ்.ஜே.சூர்யா, ‘ நியூ’ படத்தின் ஹீரோ ஆனார்.படம் மிகப்பெரிய வெற்றி.
அடுத்து சூர்யா, ஹீரோவாக நடித்த படமான ‘அ..ஆ…’ படு தோல்வி அடைந்தது.
எனினும் சில படங்களில் நாயகனாகத் தொடர்ந்தார்.இப்போது தமிழில் மட்டுமில்லாது, இந்தி, தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்குகிறார். டைரக்ஷன் தொழிலை மறந்து விட்டார்.
எடுத்த எடுப்பிலேயே ஹீரோ – இயக்கம் என பயணித்து, ‘புதியபாதை’ போட்டவர் , பாக்யராஜிடம் உதவியாளராக இருந்த பார்த்திபன். இப்போதும் அதனை தொடர்கிறார்.
எண்பதுகளில், பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள், என பல வெள்ளி விழாப்படங்களைக் கொடுத்த ஆர்.சுந்தரராஜன்,, ஒரு தேக்க நிலைக்குப் பின் முழு நேர நகைச்சுவை நடிகர் ஆனார்.
மணிவண்னனும் அவரது பாதையை தொடர்ந்தார். தனது குருநாதர் பாரதிராஜாவின் ‘கொடிபறக்குது ‘படத்தில் வில்லனாக நடிக்க ஆரம்பித்த அவர், பின்னாட்களில் நகைச்சுவை நடிகராக மாறிப்போனார். அப்படியே மறைந்தும் போனார்.
சில வெற்றிப்படங்களை கொடுத்த மனோபாலா, சந்தான பாரதி, டி.பி.கஜேந்திரன் ஆகியோர் இயக்கத்தைக் கைவிட்டாலும் நடிப்பை தொடர்ந்தார்கள். சசிகுமார், சமுத்திரகனி இயக்கத்தை மறந்து, நடிப்பில் மூழ்கி விட்டார்கள்.
சேரன் குறித்த தகவல்கள் இல்லை.
‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ராஜ்கிரண், அதற்கு முன்பு சினிமா விநியோஸ்தராக இருந்தவர். முதல் படம் நல்ல வசூலை குவித்தது.
அடுத்து இயக்கம் – நடிப்பு என 2 வெள்ளிவிழாப் படங்களையும், பின்னர் நடிகராகச் சில தோல்வி படங்களையும் அளித்தார்.இப்போது அண்ணன், அப்பா கேரக்டர்கள் செய்கிறார்.
நடிப்பு –இயக்கம் என இரட்டை குதிரையில் பயணம் செய்பவர்கள் ‘லிஸ்டில்’ கவுதம் மேனன், மிஷ்கின், உள்ளிட்டோரையும் சேர்க்கலாம் .