தமிழ்நாட்டின் முன்னணி நடிகரான விஜய் தமது அரசியல் பயணத்திற்கான முதல் அடியை எடுத்து வைத்து உள்ளார். இதனால் அவர் எந்த நேரத்திலும் கட்சித் தொடங்குவதுப் பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
மாணவர்களை தன் பக்கம் இழுப்பதற்காக தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா சென்னை கிழக்கு கடற்கரை சாலை உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் பெற்றோர்கள் உடன் விழாவுக்கு அழைத்து வரப்பட்டு இருந்தனர். இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அழைப்பிதழ் வழங்கப்பட்டு இருந்தது.
நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து விழா நடைபெற்ற அரங்கிற்கு நடிகர் விஜய் தானே காரை ஓட்டி வந்தார்.
பெருத்த ஆராவாரத்துக்கு இடையே விழாவில் விஜய் பேசியதாவது..
நிறைய இசை வெளியீட்டு விழா மற்றும் டைலர் வெளியீட்டு விழாவின் நான் பேசியிருக்கிறேன். ஆனால் இப்போது இங்கு பேசுகையில் மனதிற்கு ஏதோ பொறுப்புணர்ச்சி வந்ததாக உணர்கிறேன், வருங்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களை சந்திப்பதில் மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன்.
உங்களைப் பார்க்கையில் எனக்குப் பள்ளி பருவம் ஞாபகம் வருகிறது. நான் உங்களைப் போன்று நன்றாக படிக்கும் மாணவன் அல்ல, சராசரி மாணவன் தான்.
இது போன்ற ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்கான காரணத்தை விளக்குகிறேன். திரைப்படத்தில் வசனம் ஒன்று உண்டு. படிப்பை மட்டும் உங்களிடம் இருந்து எடுத்துக் கொள்ள முடியாது என்பதுதான் அந்த வசனம்.
வாழ்க்கையில் இலவசமாக கிடைப்பது அட்வைஸ் ஒன்று மட்டுமே. அது உங்களுக்கு சுத்தமாக பிடிக்காது, இதைத் தவிர்த்து வேறு என்ன பேசுவது என்று எனக்கு தெரியவில்லை.
நாம் படிக்கும் காலகட்டத்தில் பாடங்களை தவிர்த்து எஞ்சியிருப்பது நமது கேரக்டர் மட்டுமே
பணத்தை இழந்தால் அது மட்டுந்தான் உங்களை விட்டுப் போகும். ஆரோக்கியத்தை இழந்தால் அந்த ஒன்றை மட்டுமே இழக்க முடியும், ஆனால் உங்கள் குணத்தை இழந்தால் எல்லாமே போய் விடும்
பள்ளிப் படிப்பு வரை அப்பா, அம்மா பாதுகாப்பில் இருந்த நீங்கள் இனி சுதந்திரமாக செயல்படப் போகிறீர்கள். வெளியில் செல்லும் போது கவனமாக பாத்துக் கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கை உங்கள் கையிலே தான் உள்ளது.
இப்போது நிறைய தகவல்கள் கிடைக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை தவறான தகவல்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சமூக வலைதளங்களில் நிறைய நடக்கிறது. அதில் எது சரியானது என்று நீங்கள் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சமீப காலமாக எனக்குப் புத்தகம் படிக்கும் பழக்கம் வந்திருக்கிறது. படிப்பது மிகவும் பிடித்து உள்ளது. நாம் படித்ததை விட படித்தவர்கள் சொல்லும் போது கேட்பதுதான் மனதில் எளிதாக பதிகிறது. என்னிடம் திரைக் கதையை கொடுத்து படிக்கச் சொன்னால் , நான் அவர்களிடம் கதையை சொல்லிவிடுங்கள், கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி விடுவேன்.
எல்லா தலைவர்களை பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். அம்பேத்கர் பெரியார், காமராஜரைப் பற்றி படியுங்கள்.
உன் நண்பனை பற்றி சொல் நீ யாரென்று சொல்கிறேன் என்பது பழைய மொழி. இப்போது அது நீ எந்த சமூக வலைதளத்தை தொடர்கிறாய் என்று சொல், நான் உன்னைப் பற்றி சொல்கிறேன் என்று ஆகிவிட்டது.
நம்ம விரல வைத்து நம்ம கண்ணையே குத்தும் கதை தான் தற்போது நடந்து வருகிறது. நீங்கள் தான் அடுத்த தலைமுறையின் வாக்காளர்கள், உங்கள் பெற்றோர்களிடம் சொல்லி காசு வாங்காமல் ஓட்டு போட சொல்லுங்கள்
ஒவ்வொரு மாணவரும் பெற்றோர்களிடம் ஓட்டிற்கு பணம் வாங்கக்கூடாது என்று சொல்ல வேண்டும்.இந்த மாற்றம் நிகழ்ந்தால் தான் உங்களுடைய கல்வியும் முழுமை அடையும்.
இவ்வாறு விஜய் பேசினார்.
பின்னர் பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு முதலாவதுப் பரிசாக வைர நெக்லசை வழங்கி அவரை பாராட்டினார். உடல் ஊனமுற்ற மாணவி ஆர்த்திக்கான பரிசை அவர் இருந்த இடத்திற்கே சென்று வழங்கிய விஜய், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
1404 மாணவ மாணவிகளுக்கும் அவர் வழங்கிய ஊக்கத் தொகையின் மதிப்பு 1.17 கோடி ரூபாய் ஆகும்.
நடிகர் விஜயின் இந்த பொதுப் பணி அவர் விரைவில் அரசியலில் காலடி எடுத்து வைப்பதற்கான முதற் படியாக கருதப்படுகிறது. அவருடை அரசியல் பயணம் பற்றிய அறிவிப்பு 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வரக் கூடும் என்ற கருத்து நிலவுகிறது.
000