May 30, 2023
தன்னை சங்கி என விமர்சித்தவர்களுக்கு வேதனையுடன் பதில் அளித்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி. பிரதமர் மோடிக்கு நன்றி கூறியதற்காக கடுமையான விமர்சனத்துக்கு ஆளான நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி விளக்கம் அளித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. 1200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடம் கடந்த ஞாயிற்றுக் கிழமை திறக்கப்பட்டது. இதனை திறந்து வைத்த பிரதமர் மோடி, சோழர் ஆட்சி முறையின் அடையாளமான செங்கோலை மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைத்தார்.
தமிழகத்தின் செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டதற்கு பலரும் பிரதமர் மோடிக்கு நன்றி கூறி வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குநரான சீனு ராமசாமியும் பிரதமர் மோடிக்கு நன்றி கூறினார். இதுதொடர்பாக அவர் பதிவிட்ட டிவிட்டில், தமிழ்ச் செம்மொழிக்கு மத்திய அரசின் கட்டிடம் தந்தீர்கள், இன்று இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தில் சங்ககாலம் போற்றிய நீதியின் அடையாளம் செங்கோலை போற்றும் பிரதமர் மோடி அவர்களே உலகத்திற்கு செங்கோல் வழியாக தாய்மொழியை போற்றும் தமிழ் இனத்திற்கு பெருமை தந்துள்ளீர் பெரிய விஷயம் என குறிப்பிட்டிருந்தார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்களும் சங்கியா என கேட்டு கன்னாபின்னாவென விமர்சித்து வந்தனர். தன்னை விமர்சித்தவர்கள் அனைவருக்கும் ரொம்பவே பொறுமையாக பதில் அளித்தார். தன்னை விமர்சித்த நபர்களிடம் நன்றி சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்டும் தனது நிலைப்பாட்டை விளக்கினார் சீனு ராமசாமி.
ஆனாலும் இந்த பஞ்சாயத்து தீர்ந்தப்பாடில்லை. இந்நிலையில் தான் சங்கிமில்ல லுங்கியுமில்ல என ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார் சீனு ராமசாமி. இதுகுறித்து சீனு ராமசாமி பதிவிட்டிருப்பதாவது,
“நான் சங்கியுமல்ல
அங்கியுமல்ல
லுங்கியுமல்ல
டர்பன்னும் அல்ல
நீலவான் அல்ல
மேலும்
தமிழ் தேசியம்
திராவிடம்
இன்னபிற ஜாதியம்
இப்படி
எல்லையில்லா உலகில் உள்ள அனைத்து பிரிவினர்களிடமும் இருக்கும் தொழிலாளர்களுக்கு உரிமைக்கு குரல் தரும் சாமான்யன்.
“எல்லோரையும் குளித்து வரச்சொன்னாயே
நந்தனை மட்டும் ஏன் தீக்குளித்து வரச்சொன்னாய்” என எழுதி
வள்ளுவத்துக்கு
விளக்கவுரை தந்து
வான் உயர சிலை வைத்த முத்தமிழறிஞரின் தமிழ் நேசன்.
யதார்த்த
கலைச்சிற்பி பாலுமகேந்திரனின்
பள்ளியின் கடைசி இருக்கை மாணவன்.
மக்கள் திலகத்தின் வள்ளல் குணத்தை போற்றுபவன்
கிருபானந்த வாரியின் தமிழ் மாணக்கன்.
தமிழ் மொழிக்கு புகழ் செய்வோரை வாழ்த்துபவன்.
நம்
பாரத பிரதமருக்கு பலர் சொன்ன
பிறந்த நாள் வாழ்த்துப் போல்
நீதி வழுவாத தமிழ்
‘செங்கோல்’
தமிழ் ஓதுவார்கள்
மரியாதை செய்யப்பட்டதை வாழ்த்தினேன்.
தமிழ் நாட்டில்
மூலஸ்தானத்துள் செல்ல முடியாத ஓதுவார்கள் புதிய
பாராளுமன்றத்தில்
போவதும் எனக்கு முக்கியமாகப் பட்டது.
மீண்டும் பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு அன்பு நன்றி வாழ்த்துகள்”… என பதிவிட்டுள்ளார்.