June 12, 23
நிலையான வளர்ச்சிக்கு பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் முக்கியம் – ஜி20 கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!
ஜி20 தொடர்பான கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நிலையான வளர்ச்சி, இலக்குகளை அடைவதற்கு பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவை முக்கியம் என்று கூறியுள்ளார்.
வாரணாசியில் ஜி-20 நாடுகளின் மேம்பாட்டு அமைச்சர்களின் கூட்டம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரை நிகழ்த்தினார் ..
காணொலியில் பிரதமர் மோடி பேசியதாவது:
வளர்ச்சி என்பது தான் தெற்குலகின் மிக சவாலான விசயமாக உள்ளது, கொரோனா காரணமாக ஏற்பட்ட இடையூறுகள் தெற்குலக நாடுகளை கடுமையாக பாதித்துள்ளது.
ஆனால் நிலையான வளர்ச்சி ,இலக்குகளுக்கு பின்னடைவு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நமது கூட்டுப் பொறுப்பு ஆகும், மேலும் நிலையான வளர்ச்சியிலிருந்து
யாரும் பின்னடையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நமது முயற்சிகள் விரிவானதாகவும், நியாயமானதாகவும், நிலையானதாகவும் இருக்க வேண்டும், அதனை அடைவதற்கு தங்களிடம் செயல் திட்டம் உள்ளது என்ற வலுவான செய்தியை உலகிற்கு இந்த குழு பறைசாற்ற வேண்டும்.
தொழில்நுட்ப பரவலாக்கல் என்பது தரவுகள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியுள்ளது,
மேலும் இந்தியாவில், டிஜிட்டல் மயமாக்கல் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு
வந்துள்ளது, இந்தியா தனது அனுபவத்தை கூட்டு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது.
இந்தியாவில், வளர்ச்சியடையாமல் பின்தங்கியிருந்த 100க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கூறினார். நிலையான வளர்ச்சி இலக்குகள் அடைவதற்கு பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவை முக்கியமானவை என்றும் அவர் தெரிவித்தார்.