ஜுலை, 28-
ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தால், யாரை வேண்டுமானாலும் அர்ச்சகராக நியமிக்கலாம் என்ற தனி நீதிபதி தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது.
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி கடந்த 2018 – ஆம் ஆண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த அறிவிப்பை எதிர்த்து சுப்ரமணிய குருக்கள் என்பவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, ஆகம முறைகள் தெரிந்தவர்களை அர்ச்சகராக நியமிக்க தடை இல்லை சில வாரங்கள் முன்பு தீர்ப்பளித்து இருந்தார்.
இதற்கு எதிராக சுப்பிரமணிய குருக்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான இரண்டு நீதிபதிகள் அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்பிரமணிய குருக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆகம விதிகளும் பூஜை முறைகளும் தெரிந்திருந்தால் எந்த சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தீர்ப்புக்கு இடைக் கால தடை விதிக்கக் கோரினர். இதனை ஏற்க மறுத்த நீதீபதிகள் அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டு உள்ளனர்.
இதனால் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு இப்போது தடை இல்லை.
000