ஆகஸ்டு,23-
அமைச்சர்கள் தங்கம்.தென்னரசு,கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இருவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதுக் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து உள்ளது. இரண்டு பேரும் செப்டம்பர் 20- ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரை தங்கம்.தென்னரசு,கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இருவரும் அமைச்சர்களாக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்தார்கள் என்பது புகாராகும். அதன் பிறகு அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் அவர்கள் இவரும் சொத்துக் குவிப்பு வழக்கை மாநில லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்தது.
இவ்விரு வழக்குகளிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தங்கம். தென்னசுர சார்பில் கடந்த ஆண்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் அவர், தன் மீதும் தன் மனைவி மீதும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குப் போடப்பட்டு உள்ளதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருந்தார். இதனை ஏற்று அவர்கள் இருவரையும்அந்த நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்து.
இதன் பிறகு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவருடை மனைவி ஆதிலட்சுமி,உதவியாளர் சண்முகமூர்த்தி ஆகியோர் மீதான வழக்கு ஸ்ரீ வில்லி புத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது . அந்த வழக்கில் இருந்து அவர்கள் மூவரையும் கடந்த மாதம் 20- ஆம் தேதி விடுவித்து நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.
இந்த இரு வழக்குகளும் முறையாக விசாரிக்காமல் தீர்ப்புக் கூறப்பட்டு உள்ளதாக கூறி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு உள்ளார். இந்த வழக்குகள் மீது காலையில் விசாரணை நடத்திய அவர் ..
“கடந்த 2021- ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை தனது போக்கை மாற்றிக்கொண்டு விட்டது தெரிகிறது. அமைச்சர்கள் இரண்டு பேர் மீதான வழக்கில் விசாரணை நீதிமன்றம் அளித்து உள்ள தீர்ப்பை படித்ததும் மூன்று நாட்களாக தூக்கம் வரவில்லை. அந்த தீர்ப்பு மனசாட்சியை உலுக்கியதால் தாமாக முன்வந்து விசாரணை நடத்த நேரிட்டு உள்ளது.
இரண்டு வழக்குகளிலும் தீர்ப்புக் கூறப்பட்ட வடிவம் ஒரே மாதிரியாக உள்ளது. ஒரே தீர்ப்பு தேதி மாற்றி இரண்டு பேருக்கும் வழங்கப்ப்பட்டு இருக்கிறது. நீதின்றம் கட்சிக்கோ அரசுக்கோ உரித்தானது அல்ல. அது குப்பனுக்கும் சுப்பனுக்கும் உரியது.
சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் விடுவித்தது குறித்து அமைச்சர்கள் தங்கம்.தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இருவரும் செப்டம்பர் 20- ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்”. இவ்வாறு நிதிபதி ஆனந்த் வெங்டேஷ் தனது உத்தரவில் தெரிவித்து உள்ளார்.
உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து வேலூர் நீதிமன்றம் கடந்த மாதம் விடுவித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை என்று கூறி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இரு வாரங்கள் முன் தாமாக முன் வந்து விசாரணை மேற்கொண்டு உள்ளார். இப்போது மேலும் இரண்டு அமைச்சர்கள் மீதான வழக்கிலும் அவர் மறுவிசாரணை நடத்துவதற்கு உத்தரவிட இருப்பதாக தெரிகிறது. மூன்று அமைச்சர்கள் மீதான வழக்கை உயர்நீதிமன்றம் ஒரே நேரத்தில் மீண்டும் விசாரிக்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில்தான் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை கிடைத்தது குறிப்பிடத் தக்கது
000