நெல்லையில் மெகா தூய்மைப் பணித் திட்டத்தின்கீழ், மாநகராட்சிப் பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்பினர் உள்ளிட்டோர் அகற்றினர்.
சுத்தமான பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் வகையில் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா மற்றும் நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உத்தரவின் பேரில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
தன்னார்வ அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் நடத்தப்படும் இந்த மெகா தூய்மை பணியில் இந்த மாதத்தில் 2-வது சனிக்கிழமையான இன்று மாநகர பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை கிழித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.
டவுன் மண்டலத்துக்கு உட்பட்ட கீழரத வீதி, மேல ரதவீதி மற்றும் குற்றாலம் ரோடுகளில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில், உதவி கமிஷனர் வெங்கட்ராமன் மேற்பார்வையில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில், தூய்மை பணியாளர்கள் பொதுஇடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை கிழித்து அப்புறப்படுத்தினர். இதேபோல் பாளை பகுதியில் சுகாதார அலுவலர் முருகேசன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சங்கரநாராயணன், பெருமாள், அந்தோணி மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் போஸ்டர்களை கிழித்து அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.