ஏப்ரல்.17
தி.மு.க தலைவர்கள் சொத்துப் பட்டியல் வெளியீடு தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 48 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்புக் கேட்பதோடு, ரூ.500 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திமுகவினரின் சொத்துப் பட்டியல் என்ற பெயரில் சில ஆவணங்களை கடந்த 14-ம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அப்போது, அண்ணாமலை அவர் கட்டியிருக்கும் ரஃபேல் கைக் கடிகாரத்தின் பில்லையும் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க தலைவர்களின் சொத்துப் பட்டியலும் வெளியிடப்படும் என்றும் அண்ணாமலை அப்போது தெரிவித்தார்.
அண்ணாமலை வெளியிட்ட சொத்துப் பட்டியல் குறித்த அறிவிப்பை தி.மு.க தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலைக்கு எதிராக தி.மு.க சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில், வழக்கறிஞர் வில்சன் இந்த நோட்டீசை அனுப்பியுள்ளார்.
அதில், மு.க.ஸ்டாலின் தலைமையில் 2021-ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் மே மாதம் ஆட்சி அமைத்தது. முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் அயராது உழைத்து, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், மேம்பாட்டிற்காகவும் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி, தற்போது ‘திராவிட மாடல்’ ஆட்சியில் சிறந்து விளங்கி நாட்டின் சிறந்த முதல்-அமைச்சர்களில் ஒருவராக பரவலாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தல் களத்தில் நீங்களும், உங்கள் கட்சியும் முத்திரை பதிக்க முடியாத நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட முக்கியத் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் நற்பெயரை களங்கப்படுத்தவும், அவதூறு செய்யவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறீர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எனவே, தி.மு.க. மற்றும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பாக நான் (ஆர்.எஸ்.பாரதி) கூறிக்கொள்வது என்னவென்றால், உங்கள் பேச்சு, குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உங்கள் சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் இணையதளத்தில் வீடியோவை நீக்க வேண்டும். நஷ்டஈடாக ரூ.500 கோடி எங்கள் கட்சிக்காரருக்கு வழங்க வேண்டும். எங்கள் கட்சிக்காரர் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதை செலுத்த விரும்புகிறார். இந்த அறிவிப்பு கிடைத்து 48 மணி நேரத்துக்குள் இவற்றை செய்ய தவறினால், உங்களுக்கு எதிராக பொருத்தமான சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடங்குவதற்கு எங்கள் கட்சிக்காரர் முன்வருவார்.
இவ்வாறு அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.