பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ முகாமில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியான 2 வீரர்களின் உடல் சிறப்பு விமானம் மூலம் தமிழகம் கொண்டுவரப்பட்டது. கோவை மற்றும் மதுரை விமான நிலையங்களுக்கு தனித்தனியே வந்த 2 வீரர்களின் உடலும், ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டது.
பஞ்சாப் மாநிலம் பதின்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களில் ஒருவர், சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த வனவாசியை சேர்ந்த தறி தொழிலாளியின் மகன் கமலேஷ். 24 வயதான கமலேஷ்க்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து ராணுவத்தில் சேவையாற்றி பணியாற்றி வந்த அவர், நேற்று அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் வீரமரணம் அடைந்தார்.
இதையடுத்து, இராணுவ வீரர் கமலேஷ் உடல் இன்று காலை சிறப்பு விமானம் மூலம் கோவை சர்வதேச விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ராணுவ வீரர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினர். கோயம்புத்தூரில் இருந்து சேலத்திற்கு ஒரு மணி நேரத்திற்குள் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு, இறுதி மரியாதைக்கு பின் அடக்கம் செய்யப்படவுள்ளது.
உயிரிழந்த மற்றொரு தமிழக வீரர் தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்த 23 வயதான யோகேஷ் குமார் ஆவார். வீட்டிற்கு ஒரே மகனான இவர், ராணுவத்தில் சேர்ந்து சேவையாற்றி வந்ததுடன், சொநத் ஊரில் தனது பெற்றோருக்கு புதிதாக வீடும் கட்டிவந்தார். திருமணம் செய்ய பெற்றோர் வரன் பார்த்து வந்த நிலையில் யோகேஷ்குமார் துப்பாக்கிச்சூட்டில் சிக்கி நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ளார்.
இவரது உடல் சிறப்பு விமானம் மூலம் இன்று காலை மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து சொந்த ஊரான தேனி மாவட்டம் தேவாரத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் யோகேஷ் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. இருவரது உடல்களும் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.