சொத்துக்களை பாதுகாப்பதற்காக தொழில் அதிபர்கள், வணிகர்கள் ,திரைப்பட நட்சத்திரங்கள், போன்றோர் அரசியலில் நுழைவது, நாடு முழுவதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அநேகமாக அனைத்துக்கட்சிகளுமே அவர்களை அரவணைத்துக்கொள்கின்றன.
இந்நிலையில் தென் இந்தியாவில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலர் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்து கோடிகளை குவித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் குறித்த விவரங்களை, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு அண்மையில் வெளியிட்டது.
நாடு முழுவதும் அதிக சொத்துக்களை வைத்துள்ள 100 எம்.எல்.ஏ.க்கள் பெயர், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
அதிக சொத்துகள் வைத்துள்ள 100 எம்எல்ஏக்களில் 52 பேர் கர்நாடகா, ஆந்திரா, தமிழகம்,தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த பட்டியலில் கர்நாடக துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவகுமார் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு .1,413 கோடி ரூபாய்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவகுமாரின் பிரதான தொழில்- ரியல் எஸ்டேட்..
கட்சிக்காக அவர் செலவிட்ட தொகை கணக்கில் அடங்காது.
இதனால் டெல்லி தலைவர்களிடம் இவருக்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது.
.சிவகுமாரை அடுத்து, அதிக சொத்து வைத்துள்ளவர் புட்டசாமி கவுடா.இவரும் கர்நாடகாதான்.
சுயேச்சை எம்எல்ஏ வான அவருக்கு 1,267 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.
காங்கிரஸ் எம்எல்ஏ பிரியா கிருஷ்ணா,1,156 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வைத்துள்ளார்.
இது குறித்து ஜனநாயக சீர்திருத்திருத்தங்களுக்கான அமைப்பு நீண்ட விளக்கம் அளித்துள்ளது.
‘‘தென்னிந்திய எம்எல்ஏக்கள் வெளிப்படைத் தன்மையோடு சொத்துக்கள் மதிப்பை தாக்கல் செய்கிறார்கள். அவர்களின் அசையா சொத்தின் விலை மதிப்பை பொறுத்தே மொத்த சொத்து மதிப்பு அதிகமாக தெரிகிறது.
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், 30 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் ஒரு சதுர அடிக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் கொடுத்து நிலம் வாங்கினார். அதன் இப்போதைய மதிப்பு ஒரு சதுர அடி 35 ஆயிரம் ரூபாய்.
நிலத்தின் மதிப்பு உயர்ந்ததால் அவரது சொத்து மதிப்பு ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது.
பணக்கார எம்எல்ஏக்கள் பட்டியலில் முதல் 20 இடங்களில் 12 பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள்.
இதற்கு பிரதான காரணம் அவர்களில் பெரும்பாலானோர், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருப்பதுதான்.
கடந்த 30 ஆண்டுகளில் கர்நாடகாவில் ரியல் எஸ்டேட் துறை அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது.எனவே எம்.எல்.ஏ.க்கள் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது’என்கிறது,அந்த அமைப்பு.
பணக்கார 100 எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்தவர்கள்,5 பேர்.
அவர்கள் யார்? எப்படி சொத்து குவித்தார்கள் ?என்ற விவரத்தை அந்த அமைப்பு வெளியிடவில்லை.
இங்கு எல்லாம் மர்மம் தான் !