கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலியல் வழக்கில் சிக்கிய பாதிரியார் பெனிடிக் ஆன்டோ மீது புகார் கொடுத்த இளம் பெண்களிடம் இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை தலைமை இடமாகக் கொண்ட மலங்கரை கத்தோலிக்க சபையின் பாதிரியார் பெனிடிக் ஆன்டோ. 30 வயதான இவர் பேச்சிப்பாறை பிலாங்காவிளை ஆகிய இடங்களில் பாதிரியாராக பணியாற்றி வந்தார். இறுதியாக பணியாற்றிய பிலாங்காவிளை தேவாலயத்துக்கு வரும் இளம் பெண்களிடம் அவர்களின் சொந்த பிரச்சனைகளில் தலையிட்டு அதற்காக அவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாச சாட்டிங் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக பேச்சிப்பாரையை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கடந்த மாதம் 19 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, நேற்று முன் தினம் சைபர் கிரைம் போலீசார் அவரை பாளையங்கோட்டை சிறைச்சாலையில் இருந்து அழைத்து வந்து, நாகர்கோவில் நீதிமன்றத்தில் நீதிபதி தாயுமானவர் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பாதிரியார் மீது பாலியல் குற்றச்சாட்டாக ஐந்து பிரிவுகளில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் குலசேகரத்தைச் சேர்ந்த ஒரு மாணவி, ஆன்லைன் மூலம் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேலும் ஒரு வழக்கும் பாதிரியார் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு குறித்து விசாரணை செய்ய அவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் மனு அளித்தனர். அதனை விசாரணை செய்த நாகர்கோவில் நீதிமன்ற நீதிபதி தாயுமானவர், பாதிரியாரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். விசாரணைக்கு பின் மீண்டும் பாதிரியார் நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், பாலியல் வழக்கில் சிக்கிய பாதிரியார் பெனிடிக் ஆன்டோ மீது புகார் கொடுத்த இளம் பெண்களிடம் இரகசிய வாக்குமூலம் பெறபட்டது. இரண்டு புகார்கள் தொடர்பாக தனித்தனியாக குற்றபத்திரிகை தாக்கல் செய்ய சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே, மாயமான பாதிரியாரின் மற்றொரு செல் போன் மீட்கப்பட்டுள்ளது. அதில் இந்த வழக்குக்கு தேவையான தடயங்கள் கிடைக்கும் என்ற நோக்கத்தில் சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.