June 8, 23
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ன் 4ஜி, 5ஜி சேவைகளை வலுப்படுத்த ரூ.89,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிஎஸ்என்எல் இன் 4G மற்றும் 5G சேவைகளை மேம்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. தொலைதொடர்பு துறையின் முக்கியத்துவம் கருதி, பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு இந்த நிதியை ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிஎஸ்என்எல் நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களின் கடுமையான போட்டியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி நிறுவனங்கள் அழைப்புகள் மற்றும் 4ஜி டேட்டா சேவைகளை குறைந்த விலையில் வழங்கி வருகின்றன.
போட்டி நிறுவனங்கள் அதிவேக 5ஜி நெட்வொர்க்கை வெளியிட்டு வரும் நிலையில், மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உடன் சேர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனம், சில காலமாக நாடு முழுவதும் 4ஜி நெட்வொர்க் சேவையை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த முயற்சியை தொடர்ந்து மத்திய அரசு இந்த நிதியை ஒதுக்கியுள்ளது.
இந்த நிலையில் கடனில் சிக்கியுள்ள எம்டிஎன்எல் நிறுவனத்தை மூட அரசு ஆலோசித்து வருவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. பின்னர் எம்டிஎன்எல் நிறுவனத்தின் ஊழியர்களை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டது. இதனால் அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் பங்குகள் கிட்டத்தட்ட 12% உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.