பிரதமர் மோடி நீலகண்டனை போன்றவர், நாட்டு மக்களுக்காக காங்கிரஸின் விஷகும்பத்தில் இருந்து வெளியேறும் விஷம் முழுவதையும் குடித்து வருகிறார் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
கர்நாடகாவில் 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு மத்திய பிரதேச முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று கர்நாடகாவில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தேர்தல் பிரச்சாரத்தின் போது மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பேசுகையில் கூறியதாவது: எஸ்.எம்.எஸ். (சித்தராமையா, மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் சிவகுமார்) கர்நாடகாவின் வளர்ச்சிக்கு ஆபத்தானது.
மோசடி செய்தி உங்கள் மொபைல் போனை அழிப்பது போல இந்த எஸ்.எம்.எஸ். கர்நாடகத்தின் எதிர்காலத்தை நாசமாக்கும். இரட்டை என்ஜின் அரசாங்கத்தால் மட்டுமே கர்நாடகத்தை காப்பாற்ற முடியும். பிரதமர் மோடி வளமான மற்றும் சக்தி வாய்ந்த இந்தியாவை உருவாக்கி வருகிறார். ஆனால் மோடிக்கு எதிராக விஷம் பரப்பும் விஷகும்பமாக காங்கிரஸ் மாறிவிட்டது.
சிலர் மோடியை மரண வியாபாரி என்றும் சிலர் மோடி அனைவரும் திருடர்கள் என்றும், சிலர் அவரை பாம்பு என்றும் கூறுகின்றனர். ஆனால் பிரதமர் மோடி நீலகண்டனை (ஆலகால விஷத்தை உண்டு உலகை காத்த சிவபெருமான்) போன்றவர், நாட்டு மக்களுக்காக அவர் காங்கிரஸின் விஷகும்பத்தில் இருந்து வெளியேறும் விஷம் முழுவதையும் குடித்து வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.