தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை மாற்றி அமைக்க அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கான ஆணையை உறுதிசெய்த உத்தரவை, மறுஆய்வு செய்யக் கோரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கட்கள், எண்ணெய், மருத்துவ பொருட்கள் பிளாஸ்டிக் உறைகளில் பொதிந்து விற்கப்படுவதால் தடை உத்தரவை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் உள்ளதாக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 8 ஆயிரம் பிளாஸ்டிக் ஆலைகள் 3 ஆயிரத்து 200 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வரி பங்களிப்பை வழங்கி வருவதாகவும், பிளாஸ்டிக்குக்கு மாற்றாக வேறு பொருட்கள் சந்தையில் இல்லாததால், தடை உத்தரவை முழு அளவில் அமல்படுத்த இயலாது என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.