26 May, 2023
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறப்பது தொடர்பாக மக்களவை செயலகத்துக்கு ‘வழிகாட்டுதல் அல்லது ஆலோசனை’ வழங்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட பொது நலவழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த விவகாரத்தில் தலையிட விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
வழக்கறிஞர் சி.ஆர் ஜெய சுகின் என்பவர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை பொது நலவழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கினை விசாரித்த நீதிபதிகள், “இது போன்ற விசயங்களைப் பார்ப்பது இந்த நீதிமன்றத்தின் வேலை இல்லை. நீங்கள் ஏன் இதுபோன்ற வழக்குகளைத் தாக்கல் செய்கிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். இதுபோன்ற விசயங்களை நாங்கள் ஊக்குவிக்க விரும்பவில்லை. இதற்காக உங்களுக்கு அபராதம் விதிக்காததற்கு நன்றி செலுத்துங்கள்” என்று கூறினர். மேலும் இந்த விவாகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்றுக் கூறி மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
முன்னதாக, சி.ஆர் ஜெய சுகின் தனது மனுவில்,கடந்த 18-ம் தேதி மக்களவை செயலக ஜெனரல் வெளியிட்ட அறிக்கையில் வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த விழாவிற்கு குடியரசு தலைவருக்கு அழைப்பு கூட கொடுக்கப்படவில்லை. இதன் மூலம் மக்களவை செயலகம் அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயலில் ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
மேலும், அரசியலைமைப்பின் 79-வது பிரிவையும் அவர் மேற்கோள் காட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டும் மற்றும் ஒத்திவைக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கும் இருப்பதாகவும், பிரதமர் தொடங்கி அனைவரையும் நியமிப்பதும் குடியரசுத் தலைவர்தான் என அவர் தெரிவித்திருந்தார். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதில் எந்தத் தடையும் இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது.
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு: இதனிடையே, இந்த விழாவில் “குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் முடிவானது, குடியரசுத் தலைவருக்கு அவமானம் மட்டுமல்ல, நமது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். சர்வாதிகாரப் போக்கு. நாடாளுமன்றத்தில் இருந்து ஜனநாயகத்தின் ஆன்மா உறிஞ்சப்பட்டுவிட்ட நிலையில், அந்தப் புதிய கட்டிடத்திற்கு மதிப்பு இல்லை” என்று தெரிவித்து 20 எதிர்க்கட்சிகளும் திறப்பு விழா நிகழ்ச்சியை புறக்கணிக்கப்போவதாக கூட்டாக அறிவித்தன.
எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பு அழைப்புக்கு கடும் எதிப்புத் தெரிவித்துள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ,”எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு நமது ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் அரசியலைமைப்பு மதிப்புகளுக்கான அப்பட்டமான அவமதிப்பு” என்று தெரிவித்துள்ளது.